10 நிமிடத்தில் சுவையான ராகி போண்டா ரெடி.. ரெசிபி தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஸ்நாக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.
அதே சமயம், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். தற்போது இருக்கும் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் குழந்தைகளுக்கு வரும் பல நோய்களுக்கு காரணமாக அமைகிறது.
இதனால் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் கூட ஆரோக்கியமானதாக கொடுப்பது அவசியம்.
பெரியவர்களுக்கு ஏற்படும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு ஸ்நாக்ஸ் சாப்பிடுவதில் அதிகமாக உள்ளது. இதனால் வீட்டிலுள்ள பொருட்களை வைத்து நாமே ஆரோக்கியமான முறையில், ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம்.
அப்படியாயின், வீட்டிலுள்ள ராகி மாவை வைத்து எப்படி ராகி போண்டா செய்யலாம் என்பதை பதிவில் பாரக்கலாம்.
தேவையான பொருள்கள்:
- ராகி மாவு - 1 கப்
- பொட்டுக் கடலை - 1 கப்
- கொத்தமல்லி - 2 கைப்பிடி அளவு
- புதினா - 2 கைப்பிடி அளவு
- பச்சை மிளகாய் - 2 - பெருங்காயம்
- ஒரு சிட்டிகை - இஞ்சி
- சிறிதளவு (ஒரு இன்ச் அளவு)
- பூண்டு - 10 அல்லது 12 பல்
- சீரகத்தூள் - ½ டீ ஸ்பூன்
- மிளகு - ½ டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- பெரிய வெங்காயம் - 2
- கருவேப்பிலை - 1 கொத்து
- எண்ணெய் - தேவையான அளவு
போண்டா செய்வது எப்படி?
வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகிய மூன்றையும் தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் பூண்டு, இஞ்சி இரண்டையும் சேர்த்து விழுது போன்று அரைத்து கொள்ளவும்.
பச்சை மிளகாய், புதினா மற்றும் கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை ஆகிய பொருட்களை நன்றாக கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுத்து, ஈரமில்லாத மிக்ஸி ஜாரில் பொட்டு கடலையை போட்டு, பொடியாக அரைத்து தனியாக வைக்கவம். அதனுடன் ராகி மாவை சல்லடையில் போட்டு, கட்டிகள் இல்லாமல் சலித்து கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் சலித்து எடுத்த ராகி மாவு, பொட்டு கடலை மாவு, மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கட்டிகள் இல்லாமல் பிசைந்து கொள்ளவும்.
அதனுடன் சீரகத் தூள், மிளகு, நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா, கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, பிசைந்து கொள்ளவும்.
அதன் பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து காய விட்டு, எண்ணெய் சூடானதும் பிசைந்து வைத்த ராகி மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய்யில் போட்டு வேக வைக்கவும்.
நன்றாக வெந்ததும் தனியாக எடுத்து எண்ணெயை வடிகட்டி தனியாக எடுத்தால் ஆரோக்கியமான ராகி போண்டா தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |