குண்டர் சட்டம் போடும் அளவுக்கு தவறு செய்யவில்லை.. பப்ஜி மதன் உயர்நீதிமன்றத்தில் அளித்த மனு!
பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை யூடியூப் சேனல் மூலம் ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதுடன், ஆபாச யூடியூப் தளம் நடத்தியதாக பப்ஜி மதன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகம், புளியந்தோப்பு காவல் நிலையம், சைபர் கிரைம் பிரிவிலும், முதலமைச்சர் தனிப் பிரிவிலும், சென்னை மத்திய குற்றப்பிரிவிலும் புகார்கள் குவிந்தன.
இதனையடுத்து, தலைமறைவான மதனை பிடித்து, கடந்த ஜூன் 18 ஆம் தேதி தருமபுரியில் போலீஸார் கைது செய்தனர். அதன் பின்னர், ஜாமீன் கோரி மதன் தாக்கல் செய்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில், விசாரணை முழுமையாக முடிவடையவில்லை, பலர் நபர்களிடம் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளதால் முழுமையாக விசாரிக்க வேண்டியுள்ளது, எனவே ஜாமீன் வழங்க கூடாது என வாதிடப்பட்டது.
மேலும், மதன் தரப்பில், போதுமான எந்த ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. பெண்களை எந்த வகையிலும் துன்புறுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக்கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர், ஜூலை 5-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, மதன் குமார் என்கிற மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், தனது செயல்பாடுகளால் மாநிலத்தின் சட்டம், ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், பப்ஜி விளையாடுவது ஒருபோதும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் செயல் எனக்கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், தான் விளையாடியது இந்திய அரசால் தடை செய்யப்படாத கொரிய பப்ஜி விளையாட்டு எனவும் கூறியுள்ளார்.
அதன் பின்னர், அந்த மனுவில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் தொழில் போட்டியாளர்கள், தனது வீடியோவை எடிட் செய்து பதிவேற்றம் செய்துள்ளதாகவும், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் தனக்கு முறையாக வழங்கப்படவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.என்.மஞ்சுளா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு, சென்னை மாநகர காவல் ஆணையரும் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.