ஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி குழம்பு: காரசாரமான சுவையில் எப்படி செய்வது?
நம்மால் நம்ப முடியாத அளவிற்கு தற்போது நமது வாழ்க்கை முறை மாறி வருகிறது. நாம் பல ஆரோக்கியமான உணவுகளை மறந்து துரித உணவுகளுக்கே தற்போது அடிமையாகி வருகிறோம்.
இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
நாம் உண்ணும் உணவு ஒரு வேளை சரியில்லை என்றால் நமது ஜீரண சக்தி மிகவும் குறைகிறது. இதை ஆரம்பத்தில் கண்டறிந்து அதற்கேற்ற உணவை உண்பது சிறந்த பழக்கமாகும். வயிற்றில் பல பிரச்சனைகளை போக்கும் இஞ்சி குழம்பு எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- துவரம் பருப்பு – 2 ஸ்பூன்
- கடலை பருப்பு – 2 ஸ்பூன்
- சாம்பார் பொடி – 2 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் – 3
- புளி – சிறிதளவு
- பூண்டு – 20 பல்
- இஞ்சி – 25 கிராம்
- வறுத்து பொடித்த வெந்தயம் – ஒரு ஸ்பூன்
- கடுகு – 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவேண்டும். புளியை தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்துக்கொள்ளவேண்டும்.
பாத்திரத்தில் நல்லெண்ணெய்விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அரைத்த விழுதை போட்டு வதக்கவேண்டும். இதை நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவேண்டும்.
பின்னர் அதில் மஞ்சள் தூள் சேர்க்கவேண்டும். அடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, புளி கரைத்த தண்ணீர், சாம்பார் பொடி, பெருங்காய தூள், வறுத்த வெந்தயப் பொடி, உப்பு எல்லாம் சேர்க்கவேண்டும்.
பின்னர் நன்றாக கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவேண்டும். இப்போது காரசாரமான இஞ்சி குழம்பு தயார். இந்த இஞ்சி குழம்பு வயிற்று உபாதைகளுக்கு மிகவும் நல்லது. இதை உங்களுக்கு விரும்பியவாறு சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |