ஆளை தூக்கும் இறால் பிரியாணி வீட்டில் எளிமையாக செய்வது எப்படி?
அசைவப்பிரியர்களின் உணவுப்பட்டியலில் முதலிடம் பிடிப்பது கடல் உணவுகளே.... அதிலும் இறால் உணவிற்கு அடிமை அதிகம் என்று தான் கூற வேண்டும்.
மேலும் அசைவம் உணவினை விரும்புவர்கள் பிரியாணியையும் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். பொதுவாக மட்டன் மற்றும் சிக்கன் வகைகளில் பிரியாணி செய்து சாப்பிட்ட நீங்கள் தற்போது கடல் உணவான இறாலில் பிரியாணி செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
இறால்- 1/2 கிலோ
பாஸ்மதி அரிசி-2டம்ளர்
வெங்காயம்-3
இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன்
தக்காளி-2
பச்சை மிளகாய்-1
தயிர்-1/4 கப்
புதினா, மல்லி- கையளவு
மல்லித்தழை-கையளவு
மஞ்சள் தூள்-1 /2 ஸ்பூன்
மிளகாய் தூள்-1 ஸ்பூன்
பட்டை-1
கிராம்பு-2
மராட்டி மொக்கு- 1
ஏலக்காய்-2
பிரியாணி இலை-2
சோம்பு- 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய், தண்ணீர், நெய் -தேவையானஅளவு
செய்முறை:
சமையலுக்கு தேவையான இறாலை நடுவில் இருக்கும் நரம்பினை எடுத்து நன்றாக சுத்தும் செய்து கொள்ளவும். பௌல் ஒன்றில் பிரியாணி அரிசியை தண்ணீர் ஊற்றி ஊறவைத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றினை வெட்டிவைத்துக்கொண்டு அடுப்பில் குக்கரை வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் மற்றும் சிறிது நெய் ஊற்றி சூடேறியதும், அதில் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, சோம்பு, மராட்டி மொக்கு என வாசனைப் பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
பின்பு வெட்டி வைத்திருக்கும் வெங்காயம் தக்காளியை வதக்கி அதனுடன், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை சென்ற பின்பு மல்லி, புதினா இவற்றினை போட்டு, தொடர்ந்து மிளகாய் பொடி சேர்த்து கலக்கவும்.
பின்பு சுத்தம் செய்து வைத்திருக்கும் இறாலை சேர்த்து வதக்கி, நன்கு எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதித்த பின்பு ஊற வைத்திருக்கும் அரிசியை சேர்த்து, நன்றாக கலந்துவிட்டு, மூடி வைத்து இரண்டு விசில் விட்டு இறக்கவும். இப்பொழுது கமகம வாசனையில், இறால் பிரியாணி தயார்.