குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு கட்லெட்... எப்படி செய்வது ?
பொதுவாகவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு சைவ உணவாக உருளைக்கிழங்கு காணப்படுகின்றது.
உருளைக்கிழங்கு அதிக அளவில் உண்பதால் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் தடுக்கப்படுவதுடன் சரும ஆரோக்கியத்துக்கும் பெரிதும் துணைப்புரிகின்றது.
கிழங்குகளின் ராஜா என்றழைக்கப்படும் உருளைக்கிழங்கிற்கு இந்திய உணவுகளில் முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. உருளைக்கிழங்கை பலவிதமான உணவு வகைகளுடன் சேர்த்து சமைக்க கூடியதாக இருப்பது அதன் சிறப்பம்சமாகும்.
உருளைக்கிழங்கை கொண்டு குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய கட்லெட்டை எவ்வாறு எளிமையாக வீட்டிலேயே தயாரிக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
கடலை மாவு - 1 1/2 தே. கரண்டி
அரிசி மாவு - 1 1/2 தே. கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தே. கரண்டி
கரம் மசாலா - 1/2 தே. கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே. கரண்டி
பெரிய வெங்காயம் - 1 கப்
பிரட் துகள்கள் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி இலை - 1 கைப்பிடியளவு
கருவேப்பிலை - 1 கைப்பிடியளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில், உருளைக்கிழங்கை நன்றாக கழுவி குக்கரில் மூன்று விசில் வரும் வரை அவித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் உருளைக்கிழங்கின் தோலை நீக்கி நன்றாக மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மசித்த உருளைக்கிழங்குடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, கடலை மாவு, அரிசி மாவு, கரம் மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து பிசைந்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் பிசைந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக எடுத்து உருட்டி வட்டமாக தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு தட்டில் பிரட் துகள்கள் போட்டு அதன் மேல் தட்டி வைத்துள்ள மாவை புரட்டி போட்டு தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுத்தால் சுவையான மணமணக்கும் உருளைக்கிழங்கு கட்லெட் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |