நன்கொடையாக கொடுக்கப்படும் மலம்: முகம் சுழிக்காதீங்க! இதோ உண்மை காரணம்
சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கலாம். ஆனால், ஒருவரின் உடல் கழிவான மலமும் பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது என்பது தெரியுமா?
மனித கழிவுகளில் இருந்து மீத்தேன் எரிவாயு உற்பத்தி செய்வது சிலருக்கு தெரிந்திருக்கலாம். அது பெருமளவில் பயன்பாட்டுக்கு வரவில்லை என்பது வேறு விஷயம்.
ஆனால், உங்கள் உடலில் இருந்து கழிவாக வெளியேறும் மலம், நோயாளிகளை குணப்படுத்தும் என்று தெரியுமா? அதுமட்டுமல்ல, உடல் தானம், உடல் உறுப்பு தானம் (Different types of Donation) போல, உங்கள் உடலில் இருந்து வெளியேறும் கழிவையும் தானம் செய்ய முடியும் என்று தெரியுமா?
மல தானத்திற்கு நீங்கள் தயாரா?
ஒரு மனிதனாக, மக்கள் தங்கள் உடல் பாகத்தை தானம் செய்ய தயாராக உள்ளனர். ரத்த தானம், கண் தானம், உடல் உறுப்பு தானம் போன்ற தானம் போல, இப்போது மல தானம் என்று ஒரு புதிய டிரெண்ட் (Trending Donation) தொடங்கியுள்ளது. ஆம், இப்போது மக்கள் தங்கள் மலத்தையும் தானம் செய்யலாம்.
மலத்தை தானம் பெற வேண்டிய அவசியம் என்ன? அதுதான் பொதுக் கழிவறைகளில் அளவுக்கு அதிகமாக கிடைக்கிறது என பல கேள்விகள் எழுகிறதா? அதற்கு முன்னதாக, மல தானம் செய்த பிறகு, அதை எப்படி பயன்படுத்துவார்கள் என்பதை தெரிந்துக் கொள்ளவும்.
மல தானம் என்பது, மனிதர்களுக்கு ஏற்படும் குடல் நோய்களை குணப்படுத்தும் என்பதால் அதற்கான தேவை அதிகரித்து வருகிறது. மலத்தை தானமாக கொடுப்பவர்களை 'Good Poo Donors' என்று அழைக்கின்றனர்.
மலத்தின் தரம் உயர்வாக இருந்தால்தான் அது, மனிதர்களின் வயிற்றில் இருக்கும் குடல் பிரச்சனைகளை நீக்குவதற்கு பயன்படும் மருத்துவ பயன்பாட்டிற்காக எடுத்துக் கொள்ளப்படும். இதுமட்டுமின்றி, மலத்தில் இருந்து உருவாக்கப்படும் குடல் பாக்டீரியாக்கள் மூலம் வயிறு தொடர்பான நோய்களை நீக்கும்.
நல்ல மலத்தை தானமாக வழங்கும் 'Good Poo Donors' மூலம், நுண்ணுயிரிகள், குறிப்பாக குடல் நுண்ணுயிரிகள் குறித்து புதிய ஆய்வுகள் செய்யப்படுகின்றன. இதன் மூலம், குடல் பாக்டீரியாவில் சில மாற்றங்களைச் செய்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
நுண்ணுயிரிகள் என்ன செய்கின்றன?
நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்யும் நுண்ணுயிரிகள், நமது மனநிலையையும் சரியாக வைத்திருக்கும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
ஆரோக்கியத்தைக் கெடுக்கும் ஃபாஸ்ட் ஃபுட் போன்றவற்றால் ஏற்படும் குறைபாடுகளால் வயிற்றுப் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இதனால், தற்போது மலம் மாற்று அறுவை சிகிச்சைகளும் நடைபெறுகின்றன.
மருத்துவ நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள Biombank அமைப்பு, உயர்தர மலம் கொண்ட ஆரோக்கியமான நபர்களைத் தேடுகிறது. மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகே மலம் தானம் செய்ய அனுமதிக்கப்படும். மலத்தை நன்கொடை வழங்க விரும்புவோருக்கு 8 வார திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
மலம் மாற்று அறுவை சிகிச்சை
ஒரு மருத்துவர் ஒரு ஆரோக்கியமான நன்கொடையாளரிடமிருந்து மலத்தை மற்றொரு நபருக்கு மாற்றுவதன் மூலம் அவர்களின் குடலில் உள்ள பாக்டீரியாக்களின் சமநிலையை மீட்டெடுக்கிறார். இதுவே மலம் மாற்று அறுவை சிகிச்சை ஆகும்.
மல மாற்று அறுவை சிகிச்சைகள் செய்வதால், இரைப்பை குடல் தொற்று சரி செய்யப்படுகிறது. வேறு சில வயிற்று பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும் மல மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
மல மாற்று அறுவை சிகிச்சையை, பாக்டீரியோதெரபி (Bacteriotherapy) மற்றும் மல நுண்ணுயிர் மாற்று அறுவை சிகிச்சை (fecal microbial transplant surgery (FMT) என்றும் சொல்கின்றனர்.
