பெருமாள் கோவில் பாணியில் புளியோதரை வேண்டுமா? சுவையின் ரகசியம் இது தான்!
பொதுவாகவே கோவில் பிரசாதங்களுக்கு என தனித்துவமான சுவையும் மணமும் இருக்கும். அந்தவகையில்,பெருமாள் கோவில் என்றாலே பலருக்கும் நினைவிற்கு வருவது, தெய்வீக மணமும் சுவையும் கொண்ட அதன் புளியோதரை தான்.
இந்த புளியோதரையில் அப்படி என்ன தான் கலக்கின்றார்கள்? பெருமாள் கோவிலில் கிடைக்கும் பிரசாத புளியோதரையை அதே சுவையில் வீட்டில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சோனாமசூரி அரிசி/பொன்னி பச்சரிசி - 2 கப்
தண்ணீர் - 4 கப்
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
நல்லெண்ணெய் - 2 தே.கரண்டி
ஊற வைப்பதற்கு தேவையானவை
புளி - 60 கிராம்
சுடுநீர் - 4 கப்
ஏனைய பொருட்கள்
எண்ணெய் - 1/2 தே.கரண்டி
கட்டிப் பெருங்காயம் - 2 சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 3
வெல்லம் - சற்றுபெரிய துண்டு
வறுத்து அரைப்பதற்கு தேவையானவை
வெந்தயம் - 1/2 மேசைக்கரண்டி
மிளகு - 1/2 மேசைக்கரண்டி
கடுகு - 1 மேசைக்கரண்டி
வரமிளகாய் - 5
தாளிப்பதற்கு
நல்லெண்ணெய் - 1/4 கப்
வேர்க்கடலை - 2 1/2 மேசைக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
வரமிளகாய் - 5
கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை
முதலில் சோனாமசூரி அரிசியை 2 கப் எடுத்து, நன்றாக கழுவி, 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் என்ற வீதத்தில் 4 கப் நீரை ஊற்றி, அதனுடன் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், நல்லெண்ணெய் ஊற்றி நன்றான கலந்துவிட்டு, குக்கரில் சிறிது நீரை ஊற்றி, அந்த பாத்திரத்தை வைத்து, குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஆறியதும் குக்கரைத் திறந்து, சாதத்தை ஒரு அகலமான தட்டில் போட்டு பரப்பிவிட்டு நன்றாக குளிரவிட வேண்டும்.
பின்னர் புளியை சுடுநீரில் போட்டு 10 நிமிடங்களுக்கு நன்றாக ஊற வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதை கைகளால் பிசைந்து நீரை வடிகட்டி தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயம், மிளகு, கடுகு ஆகியவற்றை போட்டு பொன்நிறமாக மாறும் அளவுக்கு நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன், வரமிளகாயை சேர்த்து நன்றாக வறுத்து இறக்கி குளிரவிட்டு, ஒரு மிக்சர் ஜாரில் போட்டு பொடித்து எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு அதே பாத்திரத்தில், 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கட்டி பெருங்காயத்தை சேர்த்து பொரியவிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னல் ஒரு பாத்திரத்தில் புளி தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் பச்சை மிளகாயை கீறிப் போட்டு, அத்துடன் வறுத்த பெருங்காயத் தூள், வெல்லத்தை சேர்த்து, 10 நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
அதனையடுத்து ஆறவைத்த சாதத்துடன் வறுத்து அரைத்த பொடியை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், வேர்க்கடலையை சேர்த்து பொன்நிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதில் சீரகம், முழு வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக தாளித்து இறக்கிவிட வேண்டும்.
அதன் பின்பு அந்த சாதத்துடன் காய்ச்சி குளிர வைத்துள்ள புளியையும், தாளித்த பருப்புக்களை எண்ணெயோடு அப்படியே சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு, மூடி வைத்து 4 மணிநேரம் கழித்து பரிமாறினால், சுவையான பெருமாள் கோவில் புளியோதரை தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |