அடிக்கடி பாதங்கள் மரத்துப் போகுதா? அலட்சியம் வேண்டாம்! இந்த நோயாக கூட இருக்கலாம்
Peripheral Artery Disease என்றும் புற தமனி நோய் என்று அழைக்கப்படும் நோயினைக் குறித்த அறிகுறிகளை விரிவாக இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
புற தமனி நோய் Peripheral Artery Disease - PAD
புற தமனி நோய் (Peripheral Artery Disease - PAD) என்பது கைகள் மற்றும் கால்களுக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் தமனிகள் குறுகிப் போவதால் ஏற்படும் ஒரு நிலை.
புற தமனி நோய் என்பது உடலின் இரத்த ஓட்டத்தில் உண்டாகும் ஒருவித பாதிப்பாகும். இந்நிலையில் சில தமனிகள் உடலுக்குள் குறைவான இரத்தத்தை செலுத்துகின்றன.
புற தமனி நோய் பாதிப்பு ஏற்படும்போது பொதுவாக பாதங்கள் பாதிக்கப்படுகிறது. நடப்பதில் சிரமம், பாதங்களில் வலி, பிடிப்பு போன்ற அறிகுறிகள் உண்டாகலாம்.
குறிப்பாக இந்த அறிகுறிகள் நடக்கும்போது, ஓடும்போதும் உண்டாகும் நிலையில், பாதங்களுக்கு ஓய்வு எடுக்கும் போது வலி உடனடியாக மறையுமாம். தமனிகளின் இடத்தைப் பொறுத்து வலியின் இடம் அமைகிறது.
இந்த வலியின் தீவிர நிலையில் அந்த நபரால் நடக்க முடியாமல், எந்த ஒரு உடல் செயல்பாட்டையும் மேற்கொள்ள முடியாமல் போகும்.
நோயின் அறிகுறிகள்
ஏதாவது உடல் செயல்பாடு குறிப்பாக ஏணி மீது ஏறும் போது, நடக்கும் போது இடுப்பு, தொடை மற்றும் கணுக்கால் தசைகளில் வலி அல்லது பிடிப்பு ஏற்படலாம்.
பாதங்களில் பலவீனம் அல்லது மரத்துப்போவது
காலின் கீழ் பகுதி சில்லென்று குளிர்ச்சியை உணர்வது
கால் விரல்கள் அல்லது பாதங்களில் உண்டான காயம் நீண்ட நாட்கள் குணமாகாமல் இருப்பது
பாதங்களின் நிறத்தில் மாறுபாடு தோன்றுவது
கால்களில் முடி வளர்ச்சி அல்லது முடி இழப்பு ஏற்படுவது
கால் நகங்கள் நீளமாக வளர்வது
பாதத்தின் நிறம் வெளிர் நிறமாவது
பாதங்களில் துடிப்பு பலவீனமானது
ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு தோன்றுவது.
புற தமனி நோய் பாதிப்பு அதிகரிக்கும் போது, ஓய்வெடுக்கும் நிலையில் அல்லது படுத்துக் கொண்டிருக்கும் போதும் வலி உண்டாகலாம்.
இந்த வலி உங்கள் தூக்கத்தில் தொந்தரவை உண்டாக்கலாம். கட்டிலின் ஓரத்தில் காலைத் தொங்கவிடுவது, அறையில் சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்வது போன்றவற்றால் வலியில் இருந்து சிறிது நிவாரணம் பெற முடியும்.
நோய் உண்டாவதற்கான காரணங்கள்
அதீரோசெலெரோசிஸ் என்னும் பெருந்தமனி தடிப்பு தான் இந்த புற தமனி நோய்க்கு காரணமாகும்.
தமனிகளின் சுவற்றில் கொழுப்பு படிந்து இரத்த ஓட்டத்தைக் குறைப்பதுடன், பெருந்தமனி தடிப்பு இதயத்துடனும் தொடர்பு கொண்டுள்ளதாம்.
குறித்த பாதிப்பானது ஒட்டுமொத்த உடம்பில் தாக்கத்தை உண்டாக்குவதுடன், உறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை அனுப்புவதிலும் சிரமம் ஏற்படுகின்றது.
பொதுவாக இரத்த குழாய்களில் வீக்கம், கை கால்களில் காயம், அசாதாரண தசைநார் தொந்தரவுகள் அல்லது தசைகளின் அசாதாரண உடற்கூறியல் காரணமாக புற தமனி நோய் ஏற்படலாம்.
நோய்க்கான ஆபத்து காரணிகள்
புகைபிடித்தல், தமனிகளில் கொழுப்பு படிவுகள் சேர வழிவகுக்கும்.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு PAD ஏற்படும் அபாயம் அதிகம்.
உயர் இரத்த அழுத்தம், தமனிகளை சேதப்படுத்தும்.
அதிக கொலஸ்ட்ரால், தமனிகளில் கொழுப்பு படிவுகள் சேர வழிவகுக்கும்.
உடல் பருமன், PAD அபாயத்தை அதிகரிக்கும்.
வயது அதிகரிக்கும்போது, PAD ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
எவ்வாறு கண்டறிவது?
அன்கிள்-பிரேஷியல் இண்டெக்ஸ் (ABI): இது கால்களில் இரத்த அழுத்தத்தை அளவிடுவதன் மூலம், இரத்த ஓட்டத்தை சரிபார்க்கும் ஒரு எளிய சோதனை ஆகும்.
அல்ட்ராசவுண்ட்: இது இரத்த ஓட்டத்தை காட்சிப்படுத்த, ஒலி அலைகளைப் பயன்படுத்துகிறது.
ஆஞ்சியோகிராம்: இது தமனிகளில் இரத்த ஓட்டத்தை சரிபார்க்க, ஒரு சிறப்பு சாயம் மற்றும் எக்ஸ்-கதிர்களைப் பயன்படுத்துகிறது.
நோயை தடுக்கும் முறை
புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் உடனே கைவிடவும்.
நீரிழிவு பாதிப்பு இருந்தால் உடனடியாக அதனை கட்டுப்பாட்டில் வைக்கவும்.
உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். மருத்துவ ஆலோசனைக்கு பிறகு ஒரு வாரத்தில் பல முறை 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்.
தேவைப்பட்டால் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுபாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
கொழுப்பு குறைவாக இருக்கும் உணவுகளை உண்ணுவது மற்றும் சரியான உடல் எடையை பராமரிப்பதை வழக்கமாக வைத்துக்கொள்ளவும்.
புற தமனி நோய்க்கான சிகிச்சை
கொலஸ்ட்ராலைக் குறைக்க, இரத்த அழுத்தத்தைக் குறைக்க, மற்றும் இரத்த உறைதலைத் தடுக்க மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம்.
தமனிகளை விரிவுபடுத்த, அல்லது அடைப்புகளை நீக்க, ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சை முறைகள் தேவைப்படலாம்.
புற தமனி நோயை சரியாக நிர்வகிக்காமல் விட்டுவிடுவதால் உடலின் இரத்த ஓட்டம் குறையலாம். அதனால் இதயம், மூளை மற்றும் கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |