பெண்களே! இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க! மாதவிடாயின் முன்பு நடக்குமாம்
பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வருவது இயற்கை. சிலர் சென்ற மாதத்தில் வந்த மாதவிடாய் நாளை நினைவில் வைத்துக் கொள்வது வழக்கம்.
ஆனால் சிலருக்கு அந்த தேதியை ஞாபகம் வைத்துக் கொள்வது சற்று கடினமான காரியம். அதனால் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் உண்டாகிறது என்பது குறித்த குழப்பம் இருக்கும்.
சில மாதங்களில் ஒரு வாரம் முன்கூட்டியே கூட மாதவிடாய் உண்டாகலாம். ஒவ்வொரு பெண்ணிற்கும் தனது மாதவிடாய் சுழற்சி குறித்து தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
புதிய கர்ப்பத்தடை முயற்சி மேற்கொள்ளுதல் அல்லது வேறு சில காரணத்தினால் கூட மாதவிடாய் சுழற்சியில் மாறுபாடு தோன்றலாம்.
ஆனால் உங்களுக்கு மாதவிடாய் உண்டாகப் போகிறது என்பதை உணர்த்த உங்கள் உடலில் சில அறிகுறிகள் தோன்றும்.
அதனை வைத்து நீங்கள் அடுத்த சில தினங்களில் உங்களுக்கு மாதவிடாய் நெருங்குவதை அறிந்து கொள்ளலாம்.
மாதவிடாய் அறிகுறிகள்
சில பெண்கள் மிகவும் லேசான அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கு கடுமையான அறிகுறிகள் ஏற்படும் போது, அவர்கள் அலுவலகம், பள்ளிக்குச் செல்வது அல்லது வீட்டு வேலைகளைச் செய்வது போன்ற அன்றாட நடவடிக்கைகளைச் செய்வது கடினமாக இருக்கும்.
மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகள் என்பது வீக்கம், வயிற்று வலி போன்று உடல் சார்ந்தது மட்டுமல்லாமல், உளவியல் சார்ந்ததாகவும் இருக்கும். இது ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் அவற்றின் விளைவுகளின் காரணமாக இருக்கலாம். மாதவிடாய் அறிகுறிகள் குறித்து மேலும் சில தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
முகப்பரு
அண்டவிடுப்பின் போது நீங்கள் கர்ப்பம் தரிக்கவில்லை என்றால், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவு குறைந்து டெஸ்டோஸ்டிரோன் அளவு சற்று அதிகரிக்கிறது. இது சீபம் எனப்படும் ஒரு வகையான எண்ணெய் (தோலில் உள்ள சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் ஒரு எண்ணெய்) உற்பத்தியை சருமத்தில் தூண்டுகிறது.
அதிகப்படியான சீபம் உற்பத்தி செய்யப்படும்போது, முகப்பரு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் முகப்பரு பெரும்பாலும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவுகள் அதிகரிக்கத் தொடங்கும் போது, அதாவது மாதவிடாய் நிற்கும் நேரத்தில் மறைந்துவிடும்.
மார்பக வலி
புரோஜெஸ்ட்டிரோன் அளவு மாதவிடாய் சுழற்சியின் நடுப்பகுதியில், அதாவது அண்டவிடுப்பின் போது அதிகரிக்கத் தொடங்குகிறது.
இது பால் சுரப்பிகளை பெரிதாக்குகிறது. இதன் விளைவாக, பெண்கள் மாதவிடாய்க்கு முன்போ அல்லது மாதவிடாயின் போதோ மார்பகங்களில் வலி மற்றும் வீக்கத்தை உணரத் தொடங்குகிறார்கள்.
மனநிலை மாற்றம்
மாதவிடாய் சுழற்சி காலங்களில் நமது மனநிலை வழக்கத்திற்கு மாறானதாக இருக்கும். ஹார்மோன்களின் மாற்றம் அதிகளவில் அழுகை மற்றும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
சில பெண்கள் மாதவிடாய்க்கு ஒரு வாரத்திற்கு முன்பே, எந்த காரணமும் இல்லாமல் மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை எதிர்கொள்கின்றனர்.
சோர்வு
மாதவிடாய் நெருங்கும்போது, உங்கள் உடல் கர்ப்பத்தைத் தக்கவைப்பதில் இருந்து மாதவிடாய்க்குத் தயாராகும் நிலைக்கு மாறுகிறது. இது உடல் வெப்பநிலையை அதிகரித்து, தூக்கப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
இந்த காலகட்டங்களில் தூங்கச் செல்வதற்கு முன் தேநீர், காபி மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. இதனால் நிம்மதியான தூக்கத்தை பெற முடியும்.
image: alamy
தலைவலி
மாதவிடாய் வருவதற்கு முன், பெண்களின் உடலில் செரோடோனின் அளவு குறைவதன் காரணமாக, இரத்தத்தின் அளவு கட்டுப்படுத்துகிறது. இது ஒற்றைத் தலைவலி ஏற்பட வழிவகுக்கிறது.
அக்குபஞ்சர், போதுமான அளவு தண்ணீர் அருந்துதல் மற்றும் ஐஸ் ஒத்தடம் ஆகியவை மாதவிடாய்க்கு முந்தைய தலைவலியை சரிசெய்ய உதவும்.
உணவின் மீது நாட்டம்
செரோடோனின் அளவு குறைவதால், நம் மூளையில் உள்ள "ஃபீல் குட்" என்ற வேதிப்பொருளின் அளவு மிகவும் குறைவாகிறது.
இந்த சமயங்களில் தான் நாம் சாக்லேட் மற்றும் பிற சர்க்கரைப் பொருட்களை அதிகளவில் சாப்பிட வேண்டும் என ஆசைப்படுவோம்.
குறைந்த அளவிலான மெக்னீசியம் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக சாக்லேட்டுகளின் மீது நாட்டம் ஏற்படுகிறது. சாக்லேட்டுகள் மிகவும் கொழுப்பு நிறைந்தவை, எனவே அவற்றை ஆரோக்கியமான ஸ்மூத்திகளுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.
குடல் பிரச்சினைகள்
மாதவிடாய்க்கு முன் உடலில் அதிகளவில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதால், வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வாயு போன்ற குடல் சார்ந்த பிரச்சனைகளை நீங்கள் அடிக்கடி அனுபவிக்கலாம்.
ஒரு சில பெண்களுக்கு மலச்சிக்கல், மற்றவர்களுக்கு வயிற்றுப்போக்கு போன்ற தீவிர பிரச்சனைகளும் ஏற்படலாம். இதை குணப்படுத்த, நீங்கள் நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
குறிப்பாக அவகேடோ, முழு தானியங்கள், ஆப்பிள், பெர்ரி மற்றும் நட்ஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். சீரான குடல் இயக்கத்தை பராமரிக்க ஜங்க் மற்றும் காரமான உணவுகளை தவிர்க்கவும்.
வீக்கம்
சிலருக்கு பாதங்களில் வீக்கம் உண்டாகலாம். சில பெண்கள் தங்கள் அடிவயிறு, மார்பகம் போன்ற சில இடங்களில் வீக்கத்தை உணரலாம். சிலருக்கு கைகள், முகம், கால்கள் போன்றவையும் வீக்கமாக இருக்கும்.
உடலில் அதிக திரவம் தங்குவதால் இந்த நிலை உண்டாகும். ஒவ்வொரு பெண்ணிற்கும் இது வேறுபடும். உடலில் வீக்கம் ஏற்படும்போது படுத்துக் கொண்டே இருக்காமல் உடலை அசைத்துக் கொண்டிருப்பதால் இந்த வீக்கம் குறையலாம்.
அதனால் நடைபயிற்சி, வழக்கமான உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வதால் வீக்கம் குறையும்.