நாள்பட்ட சளியை வேரறுக்கும் மிளகு குழம்பு... இப்படி செய்து சாப்பிடுங்க
பொதுவாகவே மிளகில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் கே, மாங்கனீசு மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.
செரிமான கோளாறு உள்ளவர்கள் மிளகு சாப்பிட்டால் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரித்து செரிமான பிரச்சனைக்கு சிறந்த தீர்வு கொடுக்கும். மேலும் மிளகு ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது.
பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி ஏற்படும் நோய்களை தடுத்து உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.ஆஸ்துமா, மூட்டு வலி மற்றும் நாள்பட்ட சளி இருமலை போக்க பெரிதும் துணைப்புரிகின்றது.
இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்த மிளகை கொண்டு எவ்வாறு குழம்பு அட்டகாசமான சுவையில் குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வறுத்து அரைப்பதற்கு...
மல்லி - 1 மேசைக்கரண்டி
சோம்பு - 1 தே.கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
வெந்தயம் - 1/4 தே.கரண்டி
வரமிளகாய் - 3
மிளகு - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
சீரகம் - 1மேசைக்கரண்டி
அரைப்பதற்கு...
கசகசா - 1 தே.கரண்டி
முந்திரி - 20
தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
வெந்தயம் - 1/4 தே.கரண்டி
சீரகம் - 1/4 தே.கரண்டி
சின்ன வெங்காயம் - 20 (நறுக்கியது)
பூண்டு - 10 பல்
கறிவேப்பிலை - 1 கொத்து
தக்காளி - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
முதலில் கசகசா மற்றும் முந்திரியை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் வரையில் ஊற வைக்க வேண்டும். பின்னர் புளியையும் அது போல் நீரில் ஊறவைத்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, சோம்பு, கடுகு, வெந்தயம், வரமிளகாய், மிளகு ஆகியவற்றை சேர்த்து வாசணை வரும் வரையில் நன்றான வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின் அதனுடன் கறிவேப்பிலை மற்றும் சீரகம் சேர்த்து 1 நிமிடம் வரையில் நன்றாக வறுத்து இறக்கி ஆறவிட வேண்டும்.
அதன் பின்னர் ஊற வைத்த முந்திரி மற்றும் கசகசாவை நன்றாக அரைத்து தனியாக வைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதை பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், சீரகம் சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் தக்காளி,மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து தக்காளி மென்மையாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து மிளகாய் தூள் சேர்த்து ஒருமுறை கிளறிவிட்டு, புளிச்சாற்றினையும் சேர்த்து கலந்து, அதன் பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக கிளறிவிட வேண்டும்.
5 நிமிடங்களின் பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து, அத்துடன் கசகசா விழுதையும் சேர்த்து கிளறிவிட்டு குழம்பிற்கு தேவையான அளவு நீரையும் சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.
எண்ணெய் பிரிந்து குழம்பு பதத்திற்கு வந்ததன் பின்னர் கொத்தமல்லியை தூவி இறக்கினால் அசத்தல் சுவையில் மிளகு குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |