ஸ்ருதிஹாசனுக்கு வந்துள்ள நோய்! அறிகுறிகள் என்னென்ன? எப்படி சரிசெய்வது?
நடிகை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் PCOS என்னும் கருப்பை நீர்க்கட்டிகளை பிரச்சனையால் தான் எதிர்க்கொள்ளும் சவால்கள் குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு PCOS பிரச்சினை எப்படி எதிர்கொள்கிறார் என்பது குறித்து பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “என்னுடன் சேர்ந்து வொர்க் அவுட் செய்யுங்கள். நான் தற்போது பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸுடன் சில ஹார்மோனல் பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன்.
சமநிலையின்மை மற்றும் வீக்கம் மற்றும் வளர்சிதை மாற்ற சவால்களுடன் கூடிய சவாலான போராட்டம், ஆனால் நான் இதை எதிர்த்து போராடுவதற்கு பதிலாக இந்த இயற்கையான பிரச்சினையை ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டேன்.
எனது உடல் தற்போது சீராக இல்லை. ஆனாலும் நன்றாக சாப்பிட்டு , தூங்கி , உடற்பயிற்சி செய்ய முடிகிறது . அதற்காக நான் நன்றி சொல்கிறேன்.
எனது உடலில் நான் மகிழ்ச்சியாக இருப்பதனால் அந்த ஹார்மோனும் உடலில் பெருக்கெடுத்து ஓடட்டும்.
இது ஒரு பிரசங்கமாக தெரியலாம்! ஆனால் இந்த சவால் ஒரு பயணம். அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது “ என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ருதிஹாசன் வெளியிட்ட இந்த வீடியோ வைரலாக பலரும் PCOS எனப்படும் கருப்பை வீக்கம் மற்றும் கருப்பையை சுற்றியுள்ள நீர்க்கட்டிகள் தொடர்பான தகவல்கள் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த பதிவில், PCOS என்றால் என்ன? என்னென்ன அறிகுறிகள் உண்டாகும்? அதனால் ஏற்படும் தாக்கம்? எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
PCOS என்பது என்ன?
மரபு வழியாகவும், மாறுபட்ட பழக்கவழக்கங்கள், உணவு முறைகள், உடல் பருமன் போன்றவற்றின் மூலமும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் ஏற்படுகிறது.
அதாவது, கர்ப்பப்பையின் இரு பக்கங்களிலும் உள்ள சினைப்பைகளில் சின்னச் சின்னதாக நீர்க்கட்டிகள் தோன்றுகிற நிலையைத்தான் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS ) என்று சொல்கிறோம்.
பருவ வயது பெண்கள் முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு இந்நோய் வருகின்றது,
இதனால் தாய்மை அடைவதில் சிக்கல், முறையற்ற மாதவிடாய், அதிகமான உதிரப்போக்கு, உடல் பருமன், மனஅழுத்தம் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
அறிகுறிகள்
- மாதவிடாய் ஒழுங்கற்று இருப்பது
- மன அழுத்தம்
- தேவையில்லாத இடங்களில் முடி வளர்தல்
- உடல் எடை அதிகரிப்பது
- உச்சந்தலையில் முடி கொட்டுவது
- குழந்தையின்மை
என்ன சாப்பிடலாம்?
நார்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு கோதுமை, பச்சை கேரட், கடலை, பட்டாணி, முளைக்கட்டிய முழு தானியங்கள், காலிபிளவர், பீன்ஸ், ஆப்பிள், ஆரஞ்சு, பேரிக்காய், முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, பூசணிக்காய் போன்றவற்றை சாப்பிடலாம்.
இத்துடன் புரதச்சத்து அதிகம் நிறைந்த கோழி, மீன், முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, போன்றவற்றையும் சாப்பிட வேண்டும்.
மிக முக்கியமாக குறைந்தது தினமும் அரைமணிநேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும், இது PCOS மட்டுமின்றி உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் அவசியமானது.
உடனடியாக என்ன செய்யலாம்?
PCOSக்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது, ஏனெனில் நாள்பட்ட நோயால் நீரிழிவு உட்பட பல பிரச்சனைகள் வரக்கூடும் என்பதால் தொடக்க நிலையிலேயே மருந்து எடுத்துக்கொள்வது நோயின் தீவிரத்தை குறைக்கும், ஆரோக்கியமான வாழ்வியல் முறை மற்றும் உணவுகள் மூலம் குறைந்தது 6 மாதங்களில் இதனை சரிசெய்துவிடலாம்.