பாவக்காய் பிடிக்காதவரும் விரும்பி சாப்பிடும் குழம்பு ரெசிபி- செய்து பாருங்க
சைவ பிரியர்களுக்கு பிடிக்காத காய்கறி என்றால் அது பாகற்காய்தான். ஆனால் மற்ற காய்கறிகளை விட அதிகளவு ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கிய நன்மைகளும் பாகற்காயில் நிறைந்துள்ளது.
பாகற்காயை பெரும்பாலான மக்கள் வெறுப்பதற்கு காரணமே அதன் கடுமையான கசப்பு சுவைதான். ஆனால் ஆரோக்கியமாக வாழ விரும்புபவர்கள் பாகற்காயை அவர்களின் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பாகற்காயை தவிர்க்க முடியாத என்பதால் கசப்பு இல்லாமல் சமைத்து சாப்பிடுவதற்கான வழியை தெரிந்து கொள்ள வேண்டும்.
சிலர் சாம்பாருடன் பாகற்காயை சேர்த்து சமைப்பார்கள், இன்னும் சிலர் அதனை புளிக்குழம்பாக வைப்பார்கள்.
அந்த வகையில், செட்டிநாடு பகுதிகளில் பிரபலமாக உள்ள பாகற்காய் புளிக்குழம்பு எப்படி செய்யலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
- நறுக்கிய பாவக்காய் - 1 கப்
- சின்ன வெங்காயம் - 20
- பூண்டு பல் - 10 முதல் 15 வரை
- தக்காளி - 1 - புளி ஒரு எலுமிச்சைப் பழ அளவு
- சாம்பார் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- நல்லெண்ணை - 3 டேபிள்ஸ்பூன்
- கடுகு - 1/2 - ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
- வெந்தயம் - 1/2 ஸ்பூன்
- பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- உப்பு - தேவையான அளவு
புளிக்குழம்பு தயாரிப்பது எப்படி?
பாவக்காயின் இரு முனைகளையும் கிள்ளி விட்டு, கொதிக்கும் நீரில் போட்டு சில நிமிடங்கள் வேக விட்டு இறக்கவும்.
கொதி நீரில் வெல்லம் அல்லது சர்க்கரை போட்டு வேக வைக்கவும் அப்போது தான் கசப்பு தன்மை குறையும். புளியை தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டிய பின்னர் 2 கப் அளவு புளித்தண்ணீர் எடுத்து கொள்ளவும்.
குழம்பில் புளிப்பு சுவை எவ்வளவு இருக்கிறதோ அந்தளவு அதன் சுவையும் நன்றாக இருக்கும். பூண்டு, வெங்காயம் இரண்டையும் உரித்து தக்காளியுடன் சேர்த்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அதன் பின்னர், ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு போட்டு பொரிந்தவுடன் கடலைப்பருப்பு, வெந்தயம், பெருங்காயத்தூள் ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.
பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை வதக்கியவுடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறவும். பின்னர் அதில் பாவக்காய், புளிச்சாறு, உப்பு சேர்த்துக் கலக்கி, மிதமான தீயில் மூடி வைத்து கொதிக்க விடவும்.
குழம்பு நன்றாகக் கொதித்தவுடன், பாவக்காயை போட வேண்டும். நன்றாக கொதிக்கவிட்டு இறக்கினால் புளிக்குழம்பு தயார்!
இந்த புளிக்குழம்பை சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
