உடல் சூட்டை இழுத்தெடுக்கும் ஜூஸ்: 1 கப் பயறு இருந்தால் போதும் இப்படி செய்ங்க
கோடை வெயில் இப்போது மக்களை கொழுத்தி எடுக்கிறது. இந்த சூட்டிற்கு எல்லோரும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுக்க விரும்புவார்கள்.
இதில் ரோட்டு கடைகளில் விற்பனை செய்யும் ஜூஸ்களை எல்லோரும் வாங்கி குடிப்பார்கள். ஆனால் வித்தியாசமாக பயறு வைத்து ஜூஸ் செய்து குடித்துள்ளீர்களா?.
இதை எப்படி குடிப்பது பயறு சாப்பிட தானே நன்றாக இருக்கும் என நீங்கள் நினைப்பது சரிதான் இருந்தும் அதை வைத்து சுவையான கோடை கால சூட்டை தணிக்கும் ஜூஸ் எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சை பயறு - 1 கப்
- துருவிய தேங்காய் - 1 கப்
- ஏலக்காய் - 3
- ஊற வைத்த பாதாம் - சிறிது
- ஊற வைத்த முந்திரி - சிறிது
- உப்பு - 1 சிட்டிகை
- தண்ணீர் - 3 கப்+ 2 கப் + 1 கப்
- நாட்டுச்சர்க்கரை - 3/4 கப்
- ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு
- ஊற வைத்த சப்ஜா விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் ஒரு கப் பச்சை பயறை சேர்த்து நல்ல மணம் வந்து, லேசாக நிறம் மாறும் வரை வறுத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின் அதை நீரில் 2 முறை கழுவி கொள்ள வேண்டும். அதன்பின் மிக்ஸியில் போட்டு அதனுடன், 1 கப் துருவிய தேங்காய், 3 ஏலக்காய், உப்பு சேர்த்து, ஊற வைத்த பாதாம் மற்றும் முந்திரியை சேர்த்து, முதலில் 1 கப் நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் 2 கப் நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் வடிகட்டியை வைத்து, அதில் அரைத்த கலவையை ஊற்றி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
பின் வடிகட்டிய சக்கையை மீண்டும் ஜாரில் போட்டு, அத்துடன் 2 கப் நீரை ஊற்றி மீண்டும் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை மீண்டும் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
அதன் பின் மீண்டும் அந்த சக்கையை ஜாரில் போட்டு 1 கப் நீரை ஊற்றி மீண்டும் அரைத்து, அதையும் வடிகட்டிக் கொள்ள வேண்டும். இப்படி நன்றாக வடிகட்டி எடுத்த பாலுடன் நாட்டு சக்கரை போட்டு கலந்து விட வேண்டும்.
பின்னர் இதை குளிர்சாதன பெட்டியில் 1 மணிநேரம் வைக்க வேண்டும். பின்னர் அதை எடுத்து அதில் ஊற வைத்த சப்ஜா விதைகளை சேர்த்து சிறிது ஐஸ் கட்டிகளையும் சேர்த்து கலந்து பரிமாறினால், சுவையான பச்சை பயறு ஜூஸ் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
