பரோட்டா கடை சிக்கன் சால்னா சுவையின் ரகசியம் தெரியுமா? இனி வீட்டிலேயே எளிதாக செய்யலாம்!
விடுமுறை நாள் வந்தாலே வீட்டில் சப்பாத்தி, பூரி, பரோட்டா போன்ற பிடித்தமான டிபன் வகைகளை செய்து குடும்பத்துடன் ரசித்து சாப்பிடுவது பலரின் வழக்கம்.
ஆனால் அதற்கு சைடு டிஷாக எப்போதும் ஒரே மாதிரியான சிக்கன் கிரேவி அல்லது குருமாவையே செய்து சலித்துவிட்டதா? இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக, ஹோட்டல் சுவையில் அசத்தும் ஒரு சைடு டிஷ் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்துங்கள்.

அதற்கு சிறந்த தேர்வு என்றால், அனைவரும் விரும்பி சாப்பிடும் பரோட்டா கடை ஸ்டைல் சிக்கன் சால்னாதான். இந்த சால்னா பரோட்டாவுக்கு மட்டுமல்ல, சப்பாத்தி, பூரி, தோசை, இடியாப்பம் போன்ற பல உணவுகளுடனும் அருமையாக பொருந்தும்.
பரோட்டா கடையில் கிடைக்கும் சால்னாவுக்கு ஏன் அந்த தனித்துவமான சுவை இருக்கிறது என்று பலரும் ஆச்சரியப்படுவார்கள். அதே ஹோட்டல் ஸ்டைல் சுவையை இப்போது உங்கள் வீட்டிலேயே எளிதாக செய்து, குடும்பத்தினரின் பாராட்டைப் பெறுங்கள்.

தேவையான பொருட்கள்
தேங்காய் மசாலாவிற்கு
கடலை எண்ணெய் - 2 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 பெரிய மூடி
மல்லித் தூள் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
சிக்கன் மசாலா - 2 1/2 டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
சால்னா தாளிப்பதற்கு
கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 3
அன்னாசிப்பூ - 1
ஏலக்காய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
பெரிய தக்காளி - 2
உப்பு - சுவைக்கேற்ப
சிக்கன் - 1/2 கிலோ
அரைத்த மசாலா
தண்ணீர் - தேவையான அளவு
புதினா - சிறிது
கொத்தமல்லி - சிறிது

செய்முறை
முதலில் ஒரு பார்த்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், கசகசா மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து, ஈரப்பதம் போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
பின்பு அதில் மல்லித் தூள் மற்றும் சிக்கன் மசாலாவை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு வறுக்க வேண்டும். பின் அதில் பொட்டுக்கடலையை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும். பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 1 நிமிடம் மிதமான தீயில் வைத்து வதக்க வேண்டும். அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
அதன் பின் அதில் சிக்கனை கழுவி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, சால்னாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, பொடியாக நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கிளறி, குக்கரை மூடி, மிதமான தீயில் வைத்து 1 விசில் விட்டு இறக்க வேண்டும்.
விசில் போனதும் குக்கரைத் திறந்து, சிறிது நறுக்கிய புதினா, கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான பரோட்டா கடை சிக்கன் சால்னா தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |