அத்தனை ஆரோக்கியத்தையும் மொத்தமாக அள்ளித் தரும் பப்பாளி சாலட்
உணவில் பழுக்காத பப்பாளியை சேர்த்துக் கொண்டால் இத்தனை பலன்களா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அத்தனை நன்மைகள் நிறைந்திருக்கின்றன.
பழுக்காத பப்பாளியில் வைட்டமின்கள் ஏ, சி, இ மற்றும் பி நிறைவாக இருக்கின்றது. இதில் என்சைம்கள், ஃபைட்டோநியூட்ரியன்ட்ஸ் நிறைவாக உள்ளது. இது உங்களை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்கச் செய்யும்.
பழுக்காத பப்பாளியை அன்றாடம் கூட உட்கொள்ளலாம். பப்பாளியை தினமும் உண்பதால் உடல் எடைக் குறையும், மேலும் வயிற்றில் உள்ள நச்சை அகற்றுவதிலும் பெரிய பங்காக உள்ளது.
அந்தவகையில் உடலுக்கு நன்மைகளை அளிக்கக்கூடிய பப்பாளி சாலட் எவ்வாறு செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பழுக்காத பப்பாளி : 1
கேரட் : 1
ஆப்பிள் : 1
மாதுளம் பழம் : 1
தக்காளி : 1
வெள்ளைப்பூண்டு : 4 பல்
சிவப்பு மிளகாய் : 2
சிறிய வெங்காயம் : ஒரு கைப்பிடி அளவு
கொத்தமல்லி இலை : சிறிதளவு
புதினா : 10 இலைகள்
நிலக்கடலை : 50 கிராம்
எலுமிச்சம் பழம் : 1
இஞ்சி : 1 இன்ச் அளவு
ஆப்பிள் சீடர் வினிகர் : 1 டீஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
செய்முறை
பூண்டு மற்றும் சிவப்பு மிளகாயை இடிகல்லில் நன்றாக இடித்துக் கொள்ளவும். பின், சிறிய வெங்காயம், சிறிதளவு கொத்தமல்லி இலை மற்றும் நான்கைந்து புதினா ஆகியவற்றை சேர்த்து இடிக்கவும்.
எலுமிச்சை சாறு, பொடிப் பொடியாக நறுக்கிய இஞ்சி, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேவையான அளவு உப்பை இதனுடன் சேர்க்கவும்.
இப்போது சாலட்டுக்கு தேவையான மிக்சிங் கலவை தயார்.
பழுக்காத தோல் சீவிய பப்பாளி மற்றும் கேரட்டை காய்கறி துருவலில் மெலிதான சிலைஸ்களாக சீவிக் கொள்ளவும்.
சிறு சிறு சிலைஸ்களாக நறுக்கிய ஆப்பிள் மற்றும் தக்காளி, மாதுளம் பழ விதைகளை இதனுடன் சேர்க்கவும். தொடர்ந்து ஏற்கனவே தயாரித்த மிக்சிங் கலவையை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
கொத்தமல்லி இலை மற்றும் நான்கைந்து புதினா இலைகளை பொடியாக நறுக்கி இதில் தூவி விடவும்.
வறுத்த நிலக்கடலையை இடிக்கல்லில் ஒன்றிரண்டாக இடித்து சாலட்டுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். உப்பை சரிபார்த்து தேவையான அளவு மீண்டும் சேர்க்கலாம்.
இப்போது சுவையான, ஆரோக்கியமான பப்பாளி சாலட் தயார்.