சத்தான பனீர் நெய் ரோஸ்ட்...
பனீர் மிகவும் சத்துமிக்க ஒரு உணவுப் பொருளாகும். இதில் கால்சியம் அதிகளவு இருப்பதால் மூட்டுவலி பிரச்சினைகளை சரி செய்து, எலும்புகளை பலம் பெற செய்கிறது.
பனீரை பார்க்கும்பொழுதே அதை ஒரு தடவையாவது சுவைத்துப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை தோன்றும். அதிலும் பனீர் நெய் ரோஸ்ட் செய்து சாப்பிட்டால், இன்னும் இன்னும் வேண்டும் என்று மனம் கேட்கும். சரி இனி பனீர் நெய் ரோஸ்ட் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பனீர் - 200 கிராம்
தயிர் - 1 1/2 மேசைக்கரண்டி
நெய் - தேவையான அளவு
வெல்லம் - 1 மேசைக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
தனியா தூள் - 1/2 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
வறுக்க
தனியா - 2 1/2 மேசைக்கரண்டி
வெந்தயம் - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1 மேசைக்கரண்டி
மிளகாய் - 12
மிளகு - 1 மேசைக்கரண்டி
காஷ்மீர் மிளகாய் - 12
செய்முறை
பனீரை துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி, புளியை தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
காஷ்மீர் மிளகாயை ஒரு மணிநேரம் சூடான தண்ணீரில் போட்டு ஊற வைக்கவேண்டும்.
வறுக்க வேண்டிய பொருட்களை தனித்தனியாக போட்டு பச்சை வாசம் போகும் வரை வறுத்து, ஆற வைக்க வேண்டும்.
ஊறவைத்த மிளகாய், வெந்தயம், சீரகம், கடுகு, தயிர் 1 1/2 மேசைக்கரண்டி, வெல்லம், புளிக்கரைசல் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியில் நெய் ஊற்றி பனீரை போட்டு நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். இன்னொரு வாணலியில் கறிவேப்பிலை போட்டு, தாளித்த பின்பு அரைத்த பேஸ்ட்டை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
அதில் தேவையான உப்பு சேர்த்து 3 கரண்டி நெய் ஊற்றி நன்றாக கிளறவும். பின்னர் கொத்தமல்லித்தழை, தனியா தூள் சேர்த்துக் கொள்ளவும்.
அதற்கடுத்ததாக, வறுத்த பனீர் சேர்த்து கிளற வேண்டும். இறுதியாக எலுமிச்சைச்சாறு சேர்த்து இறக்கவும். சூப்பரான பனீர் நெய் ரொஸ்ட் தயார்.