அட்டகாசமான சுவையில் பன்னீர் ஆப்கானி... இப்படி ஒரு முறை செய்து பாருங்க
பொதுவாகவே நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் தினசரி ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம்.
பன்னீர் இந்தியாவின் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாகும். இதன் சுவை தனித்துவமானது என்பதால் இதை கொண்டு பல்வேறு விதவிதமான ரெசிபிகள் தயாரிக்கப்படுகின்றது.
பன்னீர் ஒரு நிறை உணவாக இருக்கின்றது. அதனை உணவில் சேர்த்துக்கொள்வதால் மூட்டு வலி வராமல் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் துணைப்புரிகின்றது.
இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட பன்னீரை கெண்டு அட்டகாசமான சுவையில் பன்னீர் ஆப்கானி செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஊற வைப்பதற்கு தேவையானவை
பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
மிளகுத் தூள் - 1 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 தே.கரண்டி
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 2 தே.கரண்டி
வதக்கி அரைப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 2 தே.கரண்டி
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 சிறிய பல்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிது
தயிர் - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் - 3/4 தே.கரண்டி
மல்லித் தூள் - 1 தே.கரண்டி
கரம் மசாலா - 1/2 தே.கரண்டி
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
உப்பு -தேவையான அளவு
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 1 தே.கரண்டி
பட்டை - 1 சிறிய துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
செய்முறை
முதலில் பன்னீரை துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் மிளகுத் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், கொத்தமல்லி மற்றும் சிறிது எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடங்கள் வரையில் நன்றாக ஊறவிட வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள பன்னீர் துண்டுகளை போட்டு பொரித்து தனியாக ஒரு தட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து பொன்நிறமாக மாறும் வரையில் நன்றான வதக்கிக்கொள்ள வேண்டும். வதங்கிய பின்பு அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கி குளிரவிட வேண்டும்.
அதனையடுத்து வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் சேர்த்து, அத்துடன் தயிரை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, சிறிது கொத்தமல்லி மற்றும் சிறிது உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
கடைசியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து கிளறி, 2 நிமிடங்கள் வரையில் வேக வைக்க வேண்டும்.
பின்பு அதில் பொரித்த பன்னீர் துண்டுகளை போட்டு கிளறி, மூடி வைத்து 5 நிமிடங்கள் வரையில் கொதிக்க வைத்து இறக்கினால், மணமணக்கும் சுவையில் பன்னீர் ஆப்கானி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |