ஆஸ்கர் விருதுடன் பொம்மன் - பெள்ளி தம்பதியினர்
அண்மையில் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறந்த பாடல், ஆவணப்படங்கள் என்பன தெரிவு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டது.
அந்த வகையில் சிறந்த ஆவண குறும்படமாக தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் தெரிவானது. இந்தத் திரைப்படமானது, தாயைப் பிரிந்த குட்டி யானைகளுக்கும் அந்த யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி என்ற தம்பதியரின் கதையையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.
இந்த ஆவணப்படமானது, நீலகிரி மாவட்டம் முதுமலையில் தயாராகியது. இதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அதில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல் இந்த ஆவணப் படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்க்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையும் சான்றிதழும் முதலமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இதில் நடித்திருந்த பொம்மன்,பெள்ளி தம்பதியினர் தமது கைகளில் ஆஸ்கர் விருதை வைத்திருக்கும் புகைப்படமானது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தினரால் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படமானது பலராலும் பகிரப்பட்டு லைக்குகளை குவித்து வருகின்றது.