ஒரே ஒரு எலுமிச்சையின் விலை 33 ஆயிரமா? அப்படியென்ன ஸ்பெஷல்
தமிழகத்தில் எலுமிச்சை பலம் ஒன்று 33 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக கோவில்களில் வைக்கப்படும் பொருட்களை வீட்டில் கொண்டு வைப்பதற்கு பக்தர்கள் அதிகமாக விரும்புவதுண்டு.
அந்தவகையில் ஈரோடு அருகே பூஜையில் வைக்கப்பட்டு இருந்த ஒரு எலுமிச்சம்பழம் 33 ஆயிரத்து 500 ரூபாய்க்கு பக்தர் ஒருவர் ஏலம் எடுத்து உள்ளார்.
ஈரோடு மாவட்டம் விளக்கேத்தி அருகே உள்ளது புதுஅண்ணாமலை பாளையம். இந்த பகுதியில் அனைவருக்கும் பொதுவான பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரர் ஆலயம். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி அன்று அதற்கு அடுத்த நாளும் பண்டிகை நடைபெறுவது வழக்கம்.
பண்டிகையின் முக்கிய நிகழ்வாக சாமியின் நெற்றியில் வைத்திருந்த வெள்ளிக்காசு, அணிந்திருந்த மோதிரம் மற்றும் பாதத்தில் வைத்து எலுமிச்சை பழம் போன்றவற்றை ஏலம் விடுவது வழக்கம். இதே போல் இந்த ஆண்டும் நடைபெற்ற ஏலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கடும் போட்டிக்கிடையே ஒரு எலுமிச்சை பழத்தை 35 ஆயிரத்து 500 க்கு ஈரோட்டைச் சார்ந்த செளந்தர் என்பவரும் , நெற்றியில் வைத்திருந்த வெள்ளிக்காசை கோபாலகிருஷ்ணன் என்பவர் 33 ஆயிரத்து 500 க்கும் ஏலம் எடுத்தனர்.
இதே போல் சாமி அணிந்திருந்த வெள்ளி மோதிரத்தை நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் 53 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் எடுத்தனர்.
சாமியின் பாதத்தில் வைக்கப்பட்டிருந்த எலுமிச்சை பழம் மற்றும் வெள்ளி பொருட்கள் அதிக தொகைக்கு ஏலம் போனது பக்தர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.