முதன்முறையாக மான்களுக்கு ஒமிக்ரான் தொற்று! பரவியது எப்படி?
மான்களில் வெள்ளை வால் மான்களிடம் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று இருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் இன்னும் சரியாகவில்லை. நாளுக்கு நாள் தன்னை உருமாறிக்கொண்டு வெவ்வொரு பெயர்களில் தொற்று பரவி வருகின்றது.
மனிதர்களுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்று தற்போது விலங்குகளுக்கும் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பிறழ்வடைந்து மீண்டும் மனிதர்களுக்கு ஏற்படுமா என்பது குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.
ஆய்வில் விஞ்ஞானிகள்
பல நாடுகளில் சிங்கம், புலி, பூனை, நாய் என பரவிவந்த நிலையில், இவை அதிகமாக மற்ற விலங்குகளுக்கு பரவாமல் விலங்குகளை தனிமைப்படுத்தி கட்டுப்படுத்திய நிலையில், அமெரிக்காவில் , அயோவா மாகாணத்தில் வாழும் மான்களை வைத்து விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தினார்கள்.

கடந்த ஒன்றரை மாதங்களாக 131 வால் மான்களில் இருந்து ரத்த மாதிரியை சேகரித்து ஆய்வு நடத்தியதில், 19 மான்களுக்கு கொரோனாவால் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மூக்கு சளி மாதிரி எடுக்கப்பட்ட 68 மான்களில் 7 மான்களின் மூக்கில் கொரோனா வைரஸ் உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
வெள்ளை நிற மான்
இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த மான்களின் மாதிரிகளை மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தியபோது, வெள்ளை நிற மான்கள் சிலவற்றில் ஒமைக்ரான் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மாதிரி எடுக்கப்பட்ட வெள்ளை நிற மான்களில் 80 சதவீத விலங்குகளில் ஒமைக்ரான் இருந்துள்ளது. இந்த மான்கள் நியூயார்க்கில் ஸ்டேடன் தீவில் வாழ்ந்து வருகின்றது.

மனிதர்களிடமிருந்து பரவிய ஒமிக்ரான்
உயிரினங்களில் இப்படி ஒமிக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறை ஆகும். காரணம், நியூயார்க்கில் மனிதர்களிடம்தான் இந்த ஒமிக்ரான் அறிகுறி தென்பட்ட நிலையில், மனிதர்களிடமிருந்து மான்களுக்கு பரவியுள்ளது தெரியவந்துள்ளது.
சில மான்களில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதால், மனிதர்களை போலவே இந்த மான்களுக்கும் மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பது தெரிய வந்துள்ளது.
மான்களிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவுவது தொடர்பாக இதுவரை உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை என்றாலும், இந்த ஆய்வு அடுத்தக்கட்ட முயற்சியிலும் விஞ்ஞானிகளை ஈடுபட வைத்துள்ளது.
