ஒமிக்ரானைத் தொடர்ந்து புதிய வைரஸ்... எச்சரிக்கும் உலக சுகாதார துறை
நாடு முழுவதும் ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், BA.2 கொரோனா எனப்படும் ஸ்டெல்த் ஓமிக்ரான் கொரோனா பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஆல்பா, டெல்டா, ஓமிக்ரான் போன்ற கொரோனா வகைகள் அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தி வருகின்றது.
தற்போது உலக நாடுகள் முழுவதும் இதற்கான தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தியுள்ள நிலையில், சமூக இடைவெளியினைக் கடைபிடித்து மெல்ல மெல்ல பாதிப்பினை குறைத்து வருகின்றது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு அதிகாரி ஓமிக்ரான் புதிய துணை வேரியண்ட் குறித்து புதிய கவலையை எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்த கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கிறது. ஓமிக்ரான் கொரோனாவில் இருந்து பல துணை வேரியண்டகள் உருவாகியுள்ளது.
இதனை தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில், BA.1, BA.1.1, BA.2 மற்றும் BA.3 உள்ளிட்ட துணை வேரியண்ட்கள் உள்ளன. இதுநாள் வரை உலகெங்கிலும் ஆதிக்கம் செலுத்திய டெல்டாவை படுவேகமாக ஓமிக்ரான் பின்னுக்குத் தள்ளுகிறது.
இப்போது சில காலமாக BA.2 கொரோனா எனப்படும் ஸ்டெல்த் ஓமிக்ரான் கொரோனாவின் விகிதாச்சாரம் அதிகரித்து வருகிறது. வேகமாகப் பரவுகிறது என்பதற்காக BA.1ஐ விட BA.2 மிகவும் ஆபத்தானது எனக் கூறிவிட முடியாது என்றும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் கிழக்கு ஐரோப்பாவின் சில நாடுகளில் ஓமிக்ரான் கொரோனா காரணமாக அடுத்த புதிய அலை ஒன்று ஏற்படுகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வேக்சின் பணிகளை நாம் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அப்போது தான் ஓமிக்ரான் அலையை நம்மால் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2 வாரங்களில், ஆர்மீனியா, அஜர்பைஜான், பெலாரஸ், ஜார்ஜியா, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் கொரோனா பாதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.