கிராமத்து பாணியில் ஊரே மணக்கும் நெத்திலி கருவாட்டு குழம்பு: எப்படி செய்வது
கிராமத்து பாணியில் செய்யும் நெத்திலி கருவாட்டு குழம்பு என்று சொன்னாலே இன்று நகரத்தில் வாழ்பவர்களுக்கு நாவில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும்.
அந்த அளவிற்கு அசைவ பிரியர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் நெத்திலி கருவாட்டு குழம்பை எவ்வாறு எளிமையாக அட்டகாசமான சுவையில் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கடலை எண்ணெய் - 2 தே.கரண்டி
நல்லெண்ணெய் - 2 தே.கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
வெந்தயம் - 1/2 தே.கரண்டி
பூண்டு - 15 பல்
சின்ன வெங்காயம் - 10
கறிவேப்பிலை - 1 கொத்து
தக்காளி - 1 (நறுக்கியது)
குழம்பு மிளகாய் தூள் - 3 தே.கரண்டி
கத்திரிக்காய் - 150 கிராம் (நீளவாக்கில் வெட்டியது)
முருங்கைக்காய் - 1 (வெட்டியது)
புளி - 1 பெரிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ள வேண்டும்)
உப்பு - தேவையான அளவு
நெத்திலி கருவாடு - 100 கிராம்
செய்முறை
முதலில் பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து நன்றாக தட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் நெத்தலி கருவாட்டை வெந்நீரில் போட்டு, அதில் உள்ள செதில்களை நீக்கிவிட்டு சுத்தம் செய்து தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் புளியை நீரில் ஊற வைத்து, கரைசலை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் மண் சட்டி ஒன்றை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும், கடுகு, வெந்தயம் ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின் அத னுடன் தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து, கறிவேப்பிலை தூவி நன்றாக வதக்கவும். வதங்கியதன் பின் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் குழம்பு மிளகாய் தூளை போட்டு மிதமான தீயில், 1 நிமிடம் வரை நன்றாக கிளறி வேகவிட வேண்டும்.
பின்பு நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காயை சேர்த்து நன்கு கிளறி விட்டு இரண்டு நிமிடங்கள் வரையில் நன்றாக வேக வைத்து கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
இறுதியாக சுத்தம் செய்து வைத்துள்ள நெத்திலி கருவாட்டை சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வேக வைத்து இறக்கினால் மணமணக்கும் சுவையில் நெத்திலி கருவாட்டு குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |