தேசிய விருது விழாவில் சாச்சனாவின் தமிழ் பாரம்பரிய தோற்றம்! வைரலாகும் புகைப்படங்கள்
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சாச்சனாவின் கதாபாத்திரம் கதையின் முக்கிய மையமாக அமைந்திருந்தது.அவரது சிறப்பான நடிப்புக்காக சமீபத்தில் தேசிய விருதும் வழங்கப்பட்டது.

கவனம் ஈர்த்த பாரம்பரிய ஆடை
டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சாச்சனா பாரம்பரிய புடவை பாணியிலான பிரத்யேக உடையில் கலந்துகொண்டு விருதைப் பெற்றார்.
அவரது ஆடை சமூக வலைதளங்களில் கவனம் பெற்ற நிலையில், அதுகுறித்து சாச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழர்களின் பாரம்பரியம், கலை, கோயில்கள் மற்றும் தமிழ்நாட்டின் அழகை பிரதிபலிக்கும் வகையில் இந்த உடை வடிவமைக்கப்பட்டதாக சாச்சனா தெரிவித்துள்ளார். யானைத்தந்த நிறத்தில் உருவாக்கப்பட்ட புடவை பாணியிலான கோட் சூட்டில் பாரம்பரிய தமிழ் கலை வேலைப்பாடுகளும், பழுப்பு மற்றும் வெள்ளை நிற பார்டர்களும் இடம்பெற்றிருந்தன.

தனது வாழ்க்கையின் முக்கியமான அத்தியாயத்தை கொண்டாடும் வகையில் இந்த உடை உருவாக்கப்பட்டதாகவும், அதை உருவாக்கிய அனைவருக்கும் நன்றி எனவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |