மகளை கிருஷ்ணராக மாற்றிய இஸ்லாமிய பெற்றோர்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
மதம் கடந்து, பெற்ற மகளின் ஆசையை நிறைவேற்ற கிருஷ்ணர் வேடம் தரிக்கவைத்து அழகுபார்த்த இஸ்லாமியத்தம்பதியினரின் செயல் பலரிடம் பாராட்டுதலைப்பெற்று வருகிறது.
கிருஷ்ண ஜெயந்தி
நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி நேற்று கொண்டாடப்பட்டது. நாட்டின் முக்கிய கோவில்களில் கிருஷ்ண ஜெயந்திவிழா கொண்டாட்டத்தில் பெரும் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர்கள் இதயதுல்லா- தாஹிதா பேகம் இஸ்லாமிய தம்பதிகள். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள், அதில் 5 வயது நிரம்பிய இரண்டாவது குழந்தை ஹேனா, கிருஷ்ண ஜெயந்தியான இன்று தொலைக்காட்சியில் சுட்டிக் கிருஷ்ணரை பற்றிய நிகழ்வுகளை பார்த்து விட்டு, பெற்றோரிடம் கிருஷ்ணர் வேடமிடுமாறு ஆசையாய் கேட்டுள்ளார்.

கிருஷ்ணராக மாறிய இஸ்லாமிய சிறுமி
பெற்றோர்களும் தாங்கள் இஸ்லாமியர்களாய் இருந்தாலும் மதங்களை கடந்து பெற்ற மகளின் ஆசையை நிறைவேற்றுவது என முடிவெடுத்து தாம்பரம் சந்தைக்கு சென்று கிருஷ்ணர் வேடமிட தேவையான மயில் இறகு, புல்லாங்குழல், சிறிய பானை, ஆடை, என அனைத்து பொருட்களையும் வாங்கி வந்து அலங்கார பொருட்களை வைத்து கிருஷ்ணர் வேடமிட்டு தெருவில் நடக்க விட்டு மகிழ்ந்தனர்.
மனிதர்கள் மதங்களை தூக்கிப் பிடித்து கொண்டிருக்கும் வேலையில் குழந்தையின் ஆசையை, மதங்களை கடந்து ஒதுக்கி வைத்து விட்டு கிருஷ்ணர் வேடமிட்ட சம்பவத்தை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
