சிரியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சுவைக்கும் முருங்கைக்காய் மசால்வடை - எப்படி செய்வது?
மாலை நேரத்தில் ஒரு கப் தேநீருக்கு ஏற்ற ஸ்நேக்ஸ் ஏதாவது சாப்பிட்டால் நல்லா இருக்கும்.
அதுவும் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். பொதுவாக ஸ்நெக்ஸ் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது வடைதான்.
அந்த வடையிலும் ஏகப்பட்ட வகைகள் இருக்கின்றது. அந்த வடையை வைத்து முருங்கைக்காய் சேர்த்து மசாலா வடை செய்து சாப்பிடலாம்.
அந்தவகையில் முருங்கைக்காய் மசாலா வடையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலைப்பருப்பு - 1-கப்
- முருங்கைக்காய் - 3
- பெரிய வெங்காயம் - 3
- பச்சை மிளகாய் - 2
- சோம்பு - 1 டீஸ்பூன்
- கருவேப்பில்லை, கொத்தமல்லி, உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
ஒரு கப் அளவிற்கு கடலை பருப்பை எடுத்து ஊற வைக்கவேண்டும். அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை நன்றாக ஊற வைத்துவிட வேண்டும்.
மூன்று முருங்கைக்காயை எடுத்து நறுக்கி கொள்ள வேண்டும். உங்களுக்கு வேண்டும் அளவிற்கு முருங்கைக்காய் சேர்த்துக் கொள்ளலாம்.
பின்னர் நறுக்கிய முருங்கைக்காயை தண்ணீர் ஊற்றி நன்கு அலச வேண்டும்.
அதன்பின் குக்கரில் முருங்கைக்காயை சேர்த்து அளவான தண்ணீர் ஊற்றி அதனுடன் அரை டீஸ்பூன் அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் குக்கரில் போட்டு 2 விசில் வந்தவுடன் அதை கீழே இறக்கி விடவும்.
இறக்கியவுடன் நன்கு வெந்த முருங்கைக்காயை எடுத்து ஒரு ஸ்பூனை வைத்து அதனுள் உள்ள முருங்கையின் சதையையும், விதையையும் எடுத்து ஒரு தனி பாத்திரத்தில் போட வேண்டும்.
அதன்பின் மூன்று பெரிய வெங்காயத்தை எடுத்து பொடிதாக நறுக்கி அதனுடன் இரண்டு பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
இதனுடன் சேர்த்து சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி எடுத்து நறுக்கி வைக்கவும்.
பின்னர் ஊற வைத்துள்ள கடலைப் பருப்பை எடுத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் இல்லாமல் வடிகட்டியப்பின் வாசனைக்காக ஒரு டீஸ்பூன் சோம்பு, அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
அதன்பின் மிக்ஸியில் தனியாக பிரித்து வைத்த முருங்கையின் சதையையும் விதையையும் சேர்த்து பிரட்டி எடுத்து விடவேண்டும்.
அரைத்த பின் ஒரு பாத்திரத்தில் அந்த பருப்பை சேர்த்து அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை இவை அனைத்தையும் ஒன்றாக சேர்ந்து கலந்து கொள்ளலாம்.
தண்ணீர் சேர்க்காமல் அரைத்தால் மட்டுமே இந்த பதத்திற்கு வரும். அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்த பின் உருண்டையாக உருட்டி வைத்த பின் அனைத்தையும் இரண்டு உள்ளங்கையால் நமக்கு வேண்டும் அளவிற்கு தட்டி எடுத்துக் கொள்ளவும்.
அதன் பின் ஒரு கடாயில் அரை லிட்டர் அளவிற்கு எண்ணையை ஊற்றி நன்கு எண்ணெய் காய்ந்த பின் நாம் தட்டி வைத்த வடையை எண்ணெயில் போட்டு வடையின் இரண்டு புறமும் பொன்னிறமாக சிவந்தவுடன் வெளியில் எடுத்து விடவும்.