நள்ளிரவில் மட்டுமே சிவ தரிசனம்... திங்கட்கிழமை இரவில் மட்டும் திறக்கப்படும் விநோத கோவில்!
திங்கட்கிழமை இரவில் மட்டும் நடை திறக்கப்படும் ஒரு வினோதமான சிவன் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது.
அது பரக்கலக்கோட்டையில் உள்ள பொதுவுடையார் கோயில். அங்கு சிவன் வெள்ளால மர வடிவில் காட்சி தருகிறார். வழக்கமாக காலை திறக்கப்படும் கோவில்கள் போலன்றி, இங்கு திங்கட்கிழமை இரவு மட்டுமே நள்ளிரவில் நடை திறக்கப்படும் என்பது இந்த கோவிலின் சிறப்பம்சமாகும்.
வரலாறு
தென்னாடுடைய சிவன் தில்லையம்பதியில் நடராஜப் பெருமானாக எழுந்தருளி, அருள்பாலித்து வருகிறார்.
இவர் சிதம்பரத்தில் அர்த்த ஜாம பூஜையை முடித்துக் கொண்டு, தென்திசை நோக்கி வந்தபோது சோமவார தினத்தில் நள்ளிரவில் இரண்டு முனிவர்களிடையே இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா? என்ற வழக்கு நடைப்பெற்றுக் கொண்டிருந்தது.
தென் சிதம்பரம் என்றழைக்கப்படும் பரக்கலக்கோட்டையில் இல்லறம், துறவறம் இரண்டுமே சிறந்ததுதான் என ஈசன் மத்தியஸ்தம் செய்து வைத்தார். அதனால் இங்கு அவருக்கு மத்தியபுரீசுவரர் என்றும், ஈசன் முனிவர்களுக்கிடையே உண்மை பொருளை இங்கு உணர்த்தியதால் பொது ஆவுடையார் என்றும் அழைக்கப்படுகிறார்.
இங்கிருந்தபடி பக்தர்களுக்கும் அருள வேண்டும் என்ற முனிவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஈசனும் அங்கிருந்த வெள்ளால மரத்திலேயே ஐக்கியமானார். இந்தக் கோயிலில் ஈசன் வெள்ளால மரத்தில் எழுந்தருளி இருப்பதால், அந்த மரத்தின் இலை பிரசாதமாக கருதப்படுகிறது.
இந்த மரத்தின் இலையை பறித்துச் சென்று, வீட்டு பூஜையறை, பணப் பெட்டி, ஆகியவற்றில் வைத்து வழிபட்டால்,ஐஷ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம்.
கோவிலின் சிறப்பம்சங்கள்
முனிவர்களுக்கு கார்த்திகை மாத சோம வாரத்தில் திருக்காட்சி தந்து உபதேசித்ததால், ஒவ்வொரு திங்கட்கிழமையும் இங்கே சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அதுவும் சிதம்பரத்தில் அர்த்தஜாம பூஜை முடிந்ததும் நடராஜர் அங்கிருந்து இங்கே வந்ததால், ஒவ்வொரு திங்கட்கிழமையும் இங்கு இரவு 10.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நள்ளிரவு 12 மணிக்கு பூஜைகள் நடைபெறுகிறது.
கோயில் திறக்கப்படும்போது, வெள்ளால மரத்தின் முன்பக்கத்தில் ஒரு பகுதியில் மட்டும் சந்தன காப்பு சாத்தி, வஸ்திரங்கள் அணிவித்து சிவலிங்கமாக அலங்காரம் செய்கின்றனர். அப்போது சன்னதிக்குள் மரத்தை காண முடியாதபடி சுற்றிலும் வெண்ணிற துணியால் மறைத்து விடுகிறார்கள்.
நமக்கு லிங்க சொரூபமாக காட்சியளிக்கிறது . மூலஸ்தானத்திற்குள் ஆலமரத்திற்கு முன்பாக சிவனின் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. முனிவர்களுக்கு சிவபெருமான் காட்சி தந்ததன் அடையாளமாக பாதம் வைக்கப்பட்டிருக்கிறது.
பக்தர்களின் தரிசனம் முடிந்த பின்பு, சூரிய உதயத்திற்கு முன்பாகவே நடை சாத்தி விடுகின்றனர் தைப்பொங்கல் தினத்தில் மட்டும் அதிகாலையில் இருந்து, மாலை 7 மணி வரையில் நாள் முழுதும் நடை திறக்கப்படுகிறது.
தைத் திருநாளில் இறைவனின் மேனியில் சூரிய ஒளி விழுவது சிறப்பம்சம். இதுதவிர, சிவனுக்குரிய சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம் என எந்த பண்டிகையும் இங்கு கொண்டாடப்படுவதில்லை. இங்கு நடை அடைக்கப்பட்டிருக்கும் நேரத்தில், சுவாமி சன்னதி கதவிற்கே பூஜைகள் நடத்தப்படுகிறது.
பக்தர்கள் அப்போது சன்னதி கதவையே சுவாமியாக பாவித்து மாலைகள் சாத்தி வழிபட்டு, பிரகாரத்தில் இருந்து ஆலமரத்தை தரிசித்துவிட்டு செல்கிறார்கள். திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இம்மரத்தில் தாலி, தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள்.
கார்த்திகை மாத நான்கு சோமவார நிகழ்ச்சியின் போதும் நள்ளிரவு இரண்டாம் ஜாமத்தில் பொது ஆவுடையாருக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும். மற்ற கோயில்களில் நடைசாற்றப்படும் நேரத்தில் இக்கோயிலில் நடை திறக்கப்பட்டு அதிகாலை நடைசாற்றப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |