பட்டியலின மக்களை அவதூறாக பேசிய நடிகை மீரா மிதுன்: தற்போது அதிரடி கைது
குறிப்பிட்ட சமூகத்தை பற்றி இழிவாகவும், அவதூறாகவும் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தனது தேவையற்ற பேச்சுக்காளால் அதிகமான வெறுப்பினை சம்பாதித்ததோடு, பிரபலங்கள் அரசியல்வாதிகள் என அனைவரையும் சரமாரியாக பேசி வருகின்றார்.
இவர் கடந்த 2016ம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்றவர். ஆனால் குறித்த பட்டத்தினை மோசடி செய்து பெற்றதாக இந்த பட்டம் பறிக்கப்பட்டது.
தமிழில் சில படங்களில் நடித்த மீராமிதுன், பின்பு படவாய்ப்பு குறைந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சர்ச்சைகளில் சிக்கினார்.
இந்நிலையில் தான் மீராமிதுன் தமிழ் இயக்குநர்கள் சிலரை சாதிய ரீதியாக தாக்கி பேசிய வீடியோ வெளியாக அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனது ஆண் நண்பருடன் மீரா தோன்றும் அந்த வீடியோவில் குறுப்பிட்ட சமூத்தை பற்றி அவமதிக்கும் வகையில் பேசுவதுடன் அந்த சமூகத்தை சார்ந்த இயக்குநர்களை திரை துறையை விட்டு நீக்கவேண்டும் என்று அறுவருக்கத்தக்க வகையில் சாடியிருந்தார்.
மீராமிதுனின் இந்த அடாவடி பேச்சு பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருந்தார்.
அப்புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் பொலிசார் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகம் செய்ய தூண்டிவிடுதல், சாதி மதம் குறித்துப் பேசி கலகம் செய்ய முயற்சித்தல் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், இன்று கேரளாவில் வைத்து கைது செய்துள்ளனர்.
மேலும் மீரா மிதுனை மிக விரைவில் சென்னைக்கு அழைத்து வரப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.