இன்று நீதிமன்றத்தில் ஆஜராகும் நடிகை மீரா மிதுன்
நடிகை மீரா மிதுன், மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
பட்டியலினத்தவர்களை குறித்து அவதூறாக பேசிய வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளர் வன்னி அரசு காவல்துறையில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் கடந்த 11ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இருப்பினும் அவர் தலைமறைவானதால் மீராமிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 14ஆம் தேதி கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இவரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னை வியாசர்பாடி எம்கேபி நகர் பகுதியை சேர்ந்த ஜோ மைக்கேல் பிரவீன் தனது புகைப்படம் மற்றும் பெயரை மீரா மிதுன் தவறாக சித்தரிப்பதாக புகார் அளித்த நிலையில் அதன் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு எம்கேபி நகர் போலீசார் பதிவு செய்த கொலை மிரட்டல் வழக்கில் மீரா மிதுனை எம்கேபி நகர் பொலிசார் கைது செய்ததுடன் அதற்கான வாரண்டை புழல் சிறையில் சமர்ப்பித்துள்ள நிலையில் மீரா மிதுன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.