கனவில் கூட என்னை கைது செய்யமுடியாது... போலீசாருக்கு சவால் விடுத்த பிக்பாஸ் மீரா மிதுன்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் மாடல் அழகி மீரா மிதுன். மேலும், சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பி பதிவிட்டு வருவார்.
அந்த வகையில், ஏற்கனவே தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யாவைப் பற்றியும், அவர்களது மனைவியான சங்கீதா, ஜோதிகா பற்றியும் மிகவும் தரக்குறைவாக பேசி மீரா மிதுன் வீடியோ வெளியிட்டது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது.
இந்நிலையில், சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய யூ-டியூப் பக்கத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களை மிகவும் அவதூறாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசி மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து, மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டுமென புரட்சி பாரதம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு உள்ளிட்டோர் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் க்ரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், இதுகுறித்த விசாரணைக்கு ஆஜராகும் படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். இது தொடர்பாக மீரா மிதுன் விரைவில் கைது செய்யப்படுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், அவர் தலைமறைவாகிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் மீரா மிதுன் தற்போது கூறியதாவது, தாராளமாக என்னை கைது செய்யுங்கள் என்றும், ஏன் காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா..?. ஆனால், என்னை கைது செய்வது என்பது நடக்காது என்றும் போலீசாருக்கு சவால் விடும் விதமாக தெரிவித்துள்ளார்.
மேலும் அப்படி நடந்தால் அது உங்கள் கனவில் தான் நடக்கும் என்றும் சவடாலாக தெரிவித்துள்ளது சர்ச்சையை பூதாகரமாக்கியுள்ளது.