குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மரவள்ளி கிழங்கு கட்லட்: வீட்டிலேயே செய்யலாம்!
பொதுவாக நாம் விதவிதமாக கட்லட்டுக்களை சாப்பிட்டிருப்போம். ஆனால் மரவள்ளி கிழங்கில் கட்லட் சாப்பிட்டிருக்கிறீர்களா?
மரவள்ளி கிழங்கு
கிழங்கு வகைகள் அனைத்திலுமே நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. அவ்வாறுதான் மரவள்ளி கிழங்கிலும் மருத்துவ குணங்கள் உள்ளது.
மரவள்ளி கிழங்கில் கார்போஹைட்ரேட், கல்சியம், பாஸ்பரஸ் மற்றும் விட்டமின் சி ஆகியவை உள்ளது.மரவள்ளிக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.
வேகவைத்த மரவள்ளிக்கிழங்கு உடலுக்கு சுறுசுறுப்பைத் தரும். மரவள்ளிக்கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் உறுதியாக்குகிறது.
இவ்வளவு குணங்கள் கொண்ட மரவள்ளி கிழங்கில் கட்லட் செய்து சாப்பிட்டால் இன்னும் அதிக நன்மையே!
மரவள்ளி கிழங்கு கட்லட் எவ்வாறு செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மரவள்ளிக்கிழங்கு - 2
மைதா - 2 தேக்கரண்டி
பிரட் தூள் - சிறிதளவு
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 10 பல்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
கருவேப்பிலை, கொத்தமல்லி- சிறிதளவு
கேரட் - 1
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1தேக்கரண்டி
கரம்மசலா - 1/2 தேக்கரண்டி
மிளகாய்ப் பொடி - 1தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை
முதலில் மரவள்ளிக்கிழங்கைச் சிறிய துண்டுகளாக நறுக்கி, அதனை ஒருபாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேகவைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில சிறிதளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
நன்கு வதங்கிய பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும்.
தண்ணீர் உறிஞ்சும் அளவிற்கு வதங்கிய பின்னர் கேரட் துருவலைச் சேர்த்து வேக வைக்க வேண்டும். பின்னர் அதனுடன் மசித்து வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கைச் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
கட்லெட் செய்யத் தேவையான பதம் வரும் வரை மசிக்க வேண்டும். அடுத்து மசாலா கலவையைச் சிறிது எண்ணெய் தடவி, கட்லெட் வடிவில் உருட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றிய பிறகு கரைத்து வைத்துள்ள மைதா மாவில் கட்லெட்டை நனைத்து, பிரட் தூளைச் சேர்த்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக எடுத்தால் சுவையான மரவள்ளிக்கிழங்கு கட்லெட் தயார்.