மண்சட்டியில் மாங்காய் மத்தி மீன் குழம்பு: எப்படி செய்வது?
கேரளாவில் மத்தி மீன் குழம்பு மிகவும் பிரபலமான ஒரு உணவு வகையாகும். மத்தி மீனில் அதிகம் முள் இருந்தாலும் இதன் சுவை எப்போதும் தனித்துவமாய் இருக்கும்.
மேலும், இதில் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின் டி, நியாசின் மற்றும் கால்சியம் ஆகியவை அதிகமாக உள்ளன.
இப்பொழுது சுவையான மாங்காய் போட்ட மத்தி மீன் குழம்பு மண்சட்டியில் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நல்லெண்ணெய்- 4 டீஸ்பூன்
- கடுகு- 1 டீஸ்பூன்
- வெந்தயம்- 1 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம்- 15
- பூண்டு- 10
- பச்சைமிளகாய்- 2
- கருவேப்பிலை- 1 கொத்து
- தக்காளி- 3
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 டீஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- மாங்காய்- 1
- குழம்பு மிளகாய் தூள்- 3 டீஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்
- புளி- எலுமிச்சை அளவு
- மத்தி மீன்- 1/2 கிலோ
- கொத்தமல்லி தலை- சிறிதளவு
செய்முறை
ஒரு மண்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, வெந்தயம், பூண்டு, சின்ன வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளியை நன்கு பிசைந்து அதில் சேர்த்துக்கொள்ளவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள் மற்றும் த்வயான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
இதனைத்தொடர்ந்து அதில் கரைத்த புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்த பின்பு அதில் வெட்டி வைத்த மாங்காயை சேர்த்து 10 நிமிடம் மூடி போட்டு கொதிக்க விடவும்.
இறுதியாக சுத்தம் செய்து வைத்துள்ள மத்தி மீனை சேர்த்து 15 நிமிடம் கொதிக்க விட்டு மல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான மாங்காய் மத்தி மீன் குழம்பு தயார்.