manathakkali kuzhambu : வயிற்றுப்புண்ணுக்கு அருமருந்தகும் மணத்தக்காளி வத்தல் குழம்பு!
கிராமப்புறங்களில் எளிதாகக் கிடைக்கும் முக்கியமான கீரை வகைகளில் ஒன்று தான் மணத்தக்காளி. சிறிய மிளகு அளவில் நறுமணமிக்க பழங்களைத் தருவதால், சில பகுதிகளில் இதை “மிளகு தக்காளி” என்றும் அழைக்கின்றனர்.
மணத்தக்காளியின் இலைகளும் பழங்களும் பாரம்பரியமாக பல்வேறு மருத்துவப் பயன்பாடுகளைக் கொண்டதாகக் கருதப்படுகின்றன.

குறிப்பாக வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்ற பிரச்சினைகளுக்கு இதன் கீரையும் பழங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், மணத்தக்காளி வத்தல் நுரையீரல் மற்றும் சிறுநீர்ப்பாதை தொடர்பான சில பிரச்சினைகளுக்கும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
சுவையும், பாரம்பரியப் பயன்களும் கொண்ட மணத்தக்காளி வத்தலை வைத்து சுவையான மணத்தக்காளி வத்தல் குழம்பை எப்படி செய்வது என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
மணத்தக்காளி வத்தல் – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 200 கிராம் (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 200 கிராம்
நல்லெண்ணெய் – 50 மில்லி
கடுகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
குழம்பு மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி
வெல்லம் – 1 தேக்கரண்டி
புளி – 2 எலுமிச்சை அளவு (ஊறவைத்து சாறு எடுத்தது)

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காயவிடவும். எண்ணெய் சூடானதும் கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து, வெங்காயம் நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதன்பின் பூண்டு மற்றும் மணத்தக்காளி வத்தலைச் சேர்த்து சில நிமிடங்கள் நன்றாக வதக்கிக் கொள்ளவும். அடுத்து உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் குழம்பு மிளகாய்த் தூள் சேர்த்து மிதமான தீயில் நன்றாகக் கிளறி வதக்கிக்கொள்ள வேண்டும்.
மசாலா நன்றாக வதங்கியதும் புளித்தண்ணீரை ஊற்றி, வெல்லத்தையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் மிதமான தீயில் குழம்பு சற்று கெட்டியாகும் வரையில் கொதிக்க விட வேண்டும்.
குழம்பில் இருந்து எண்ணெய் பிரிந்து மேலே வரத் தொடங்கியதும் அடுப்பை அணைத்து இறக்கினால் அவ்வளவுதான், சுவையான மணத்தக்காளி வத்தல் குழம்பு தயார். சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |