வயிற்றுப்புண்ணுக்கு உடனடி நிவாரணம் தரும் மணத்தக்காளி வத்தல் குழம்பு... இப்படி செய்து பாருங்க
கிராமப்புறங்களில் எளிதாகக் கிடைக்கும் முக்கியமான கீரை வகைகளில் ஒன்று மணத்தக்காளி. இது சிறிய மிளகு அளவிலான, நறுமணம் மிக்க பழங்களைத் தருவதால், சில பகுதிகளில் “மிளகு தக்காளி” என்றும் அழைக்கப்படுகிறது.
மணத்தக்காளியின் இலைகளும் பழங்களும் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டவை. இதன் பழங்களை சாப்பிடுவதும், முகத்தில் பூசுவதும் உடல் வெப்பத்தைத் தணிக்க உதவுகின்றன.

வயிறு மற்றும் குடற்பகுதிகளில் ஏற்படும் புண்களை ஆற்றும் திறன் மணத்தக்காளிக்கு உள்ளது. குறிப்பாக வாய்ப்புண் ஏற்பட்டால், கிராமங்களில் முதலில் தேடப்படும் இயற்கை மருந்துகளில் மணத்தக்காளியும் ஒன்று.
இதன் கீரை மற்றும் பழங்கள் இரண்டும் வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த நிவாரணமாகக் கருதப்படுகின்றன. மேலும், மணத்தக்காளி வத்தல் நுரையீரல் தொடர்பான சில உடல்நலக் குறைபாடுகளுக்கு உதவக்கூடியது.
இது சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரித்து, சிறுநீர்ப்பாதை தொடர்பான பிரச்சினைகளுக்கும் நன்மை தருகிறது என்று பாரம்பரிய மருத்துவ முறைகளில் குறிப்பிடப்படுகிறது.
இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த மணத்தக்காளி வத்தலை வைத்து, சுவையும் ஆரோக்கியமும் இணைந்த மணத்தக்காளி வத்தல் குழம்பை எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்

மணத்தக்காளி வத்தல் – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 200 கிராம் (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 200 கிராம் நல்லெண்ணெய் – 50 மில்லி
கடுகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
குழம்பு மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி
வெல்லம் – 1 தேக்கரண்டி
புளி – 2 எலுமிச்சை அளவு (நீரில் ஊறவைத்து சாறு எடுத்தது)

செய்முறை
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு மற்றும் வெந்தயத்தை சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும். அதன்பின் பூண்டு பற்கள் மற்றும் மணத்தக்காளி வத்தலை சேர்த்து சில நிமிடங்கள் நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

பிறகு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் குழம்பு மிளகாய்த் தூள் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் நன்றாக கிளறி வதக்கவும்.
மசாலா நன்றாக வதங்கியதும் புளித்தண்ணீரை ஊற்றி, வெல்லத்தையும் சேர்த்து கலக்கவும். பின்னர் குழம்பு சற்று கெட்டியாகும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.
குழம்பிலிருந்து எண்ணெய் பிரிந்து மேலே வரத் தொடங்கியதும் இறக்கினால் அவ்வளவு தான் சுவையும் மருத்துவ குணங்களும் நிறைந்த மணத்தக்காளி வத்தல் குழம்பு தயார். இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |