வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு குருமா... பண்ணலாமா?
சைவ உணவுப் பட்டியலில் எப்போதும் தனி இடத்தைப் பிடித்து நிற்கும் ஒரு காய்கறி என்றால் அது நிச்சயமாக உருளைக்கிழங்கு தான்.
அசைவம் விரும்பும் உணவுப்பிரியர்களும் கூட, உருளைக்கிழங்கால் செய்யப்பட்ட உணவுகள் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள் அந்தளவுக்கு அதன் சுவை அனைவரையும் கவர்ந்துவிடுகிறது.

காய்கறிகள் என்றாலே முகத்தைச் சுழித்து ஓடும் சிறுவர்கள் கூட, உருளைக்கிழங்கு என்றால், உற்சாகமாக ஓடி வந்து தட்டில் இடம் பிடித்துவிடுவார்கள்.
சுவை மட்டுமல்லாமல், உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட் மற்றும் ஊட்டச்சத்துக்களையும் வழங்கும் உருளைக்கிழங்கை எளிமையான பொருட்களை கொண்டே சுவையாக பல்வேறு வகைகளிலும் சமைக்கலாம்.

அவற்றில் மிகவும் பிரபலமானதும், ஹோட்டல் பாணி உணவுகளுக்கு இணையாக வீட்டிலேயே தயாரிக்கக்கூடியதுமான ஒரு சிறப்பு உணவு தான் காரசாரமான உருளைக்கிழங்கு குருமா. எளிய முறையில் அசத்தல் சுவையில் உருளைக்கிங்கு குருமா எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரைப்பதற்கு தேவையானவை
தக்காளி - 3 (நறுக்கியது)
முந்திரி - 7
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
கசூரி மெத்தி - 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1
மல்லித் தூள் - 2
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
பெரிய உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது)
கொத்தமல்லி - சிறிது

செய்முறை
முதலில் மிக்சர் ஜாரில் தக்காளி, முந்திரி, துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பின் குக்கரில் உருளைக்கிழங்குகளை வைத்து, அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மூடி, 3 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும்.
விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கின் தோலை நீக்கி, துண்டுகளாக வெட்டி தனியாக வைக்கவும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும் சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதன் பின் கசூரி மெத்தியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பின்னர் இஞ்சி–பூண்டு விழுதை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து அரைத்து வைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்கு கிளறி, பச்சை வாசனை முற்றிலும் நீங்கும் வரை சமைக்கவும்.

அதனையடுத்து மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக கலந்து விடவும். அதனைத் தொடர்ந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
பின்னர் வேக வைத்து துண்டுகளாக்கிய உருளைக்கிழங்குகளை சேர்த்து கலந்து, மூடி வைத்து எண்ணெய் பிரியும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும். இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு குருமா தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |