மதுரை பாணியில் காரசாரமான பெப்பர் சிக்கன் கிரேவி... இப்படி செஞ்சா கொஞ்சமும் மிஞ்சாது!
பொதுவாகவே ஞாயிற்று கிழமைகளில் பெரும்பாலானவர்களுக்கு விடுமுறை என்பதால், நாவுக்கு ருசியாக சமைத்து சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.
இல்லத்தரசிகளும் கூட ஞாயிற்றுக்கிழமைகளில் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் சுவையாக சமைத்து அசத்த வேண்டும் என்று நினைப்பார்கள்.
அப்படி சன்டே ஷ்பெஷலாக அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில், மதுரை பாணியில் காரசாரமான பெப்பர் சிக்கன் கிரேவியை எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ (சிறு துண்டுகளாக்கப்பட்டது)
சின்ன வெங்காய பேஸ்ட் - 200 கிராம்
தக்காளி பேஸ்ட் - 200 கிராம்
இஞ்சி பேஸ்ட் - 75 கிராம்
பூண்டு பேஸ்ட் - 7 கிராம்
பச்சை மிளகாய் - 2
சோம்பு - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
மல்லித் தூள் - 1 1/2 தே.கரண்டி
சீரகத் தூள் - 25 கிராம்
மிளகுத் தூள் - 50 கிராம்
உப்பு - சுவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிதளவு
புதினா - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கடலை எண்ணெய் - 200 மிலி
நெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளித்து, அதனுடன் அரைத்த சின்ன வெங்காய பேஸ்ட், கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வெங்காயத்தின் பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதில், அரைத்த தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் கழுவி வைத்துள்ள சிக்கனையும் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கிறேவிக்கு தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறிவிட வேண்டும்.
சிக்கன் நன்றாக வெந்ததும், அதில் சீரகத் தூள் மற்றும் மிளகுத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, 2 நிமிடங்கள் வரையில் நன்கு வேகவிட வேண்டும்.
கடைசியாக அதனுடன் நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு இறக்கி அதில் நெய் ஊற்றி கிளறினால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் காரசாரமான மதுரை பெப்பர் சிக்கன் கிரேவி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |