மழைநீரில் நடப்பவர்களே உஷார்! உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எலி காய்ச்சல்
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
மழைக்காலத்தில் இதுபோன்று நீர் தேங்குவதால் பல்வேறு நோய்த்தொற்றுகள் பரவும் அபாயமும் அதிகரிக்கிறது. குறிப்பாக, தேங்கிய மழைநீரில் நடப்பதால் டெங்கு, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுடன், எலி காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பைரோசிஸ் தொற்றும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளதுடன், போதிய சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படுவதுடன், உயிருக்கு ஆபத்தான நிலையும் ஏற்படலாம்.

எனவே, இந்த நோய் குறித்த விழிப்புணர்வு அவசியம். லெப்டோஸ்பைரோசிஸ் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன, எப்படிப் பரவுகிறது, இதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
லெப்டோஸ்பைரோசிஸ் என்றால் என்ன?
லெப்டோஸ்பைரோசிஸ் என்பது பொதுவாக எலி காய்ச்சல் என்று அழைக்கப்படும் ஒரு வகையான பாக்டீரியா தொற்று நோயாகும். எலி, நாய், பன்றி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீரில் காணப்படும் லெப்டோஸ்பைரா என்ற பாக்டீரியா மூலம் இந்த நோய் பரவுகிறது.
குறிப்பாக, மழைக்காலங்களில் தேங்கும் வெள்ளநீர் மற்றும் சேற்றில் இந்த பாக்டீரியாக்கள் கலந்திருக்க அதிக வாய்ப்பு காணப்படுகின்றது. அத்தகைய நீரில் ஒருவர் நடக்கும்போது, கால்களில் இருக்கும் காயங்கள் அல்லது சிறிய கீறல்கள் வழியாக பாக்டீரியா உடலுக்குள் நுழைந்து தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும், கண்கள், மூக்கு மற்றும் வாய் வழியாகவும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியம். இல்லையெனில், நோய் தீவிரமடைந்து உடலின் முக்கிய உறுப்புகளைப் பாதிக்கக்கூடும்.
எலி காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள்
காய்ச்சல்
கடுமையான தலைவலி
தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி
வாந்தி மற்றும் குமட்டல்
குளிர் நடுக்கம்
வயிற்றுப்போக்கு
கண்கள் சிவந்து காணப்படுதல் அல்லது எரிச்சல் ஏற்படுதல்

அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
எலி காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகள் சாதாரண காய்ச்சல், டெங்கு மற்றும் ப்ளூ காய்ச்சல் போன்றவற்றுடன் ஒத்திருக்கலாம். இதனால் பலரும் ஆரம்பத்தில் இதைச் சாதாரண காய்ச்சல் என்று நினைத்து அலட்சியப்படுத்திவிடுகின்றனர்.
சிலர் மருத்துவரை அணுகாமல் தாங்களாகவே மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், காய்ச்சலுக்கான உண்மையான காரணம் என்ன என்பதைப் பரிசோதனை மூலமே கண்டறிய முடியும்.
குறிப்பாக, மழைநீர் அல்லது வெள்ளநீரில் நடந்து சென்ற பிறகு காய்ச்சல், தலைவலி, தசை வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அலட்சியம் செய்யக்கூடாது.
உடனடியாக மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும். சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்ப்பது அவசியம்.

எலி காய்ச்சலைத் தடுப்பது எப்படி?
மழைக்காலத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் எலி காய்ச்சல் தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்.
வெள்ளநீர் மற்றும் சேறும் சகதியுமான பகுதிகளில் நடப்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில் வெள்ளநீரில் நடக்க வேண்டியிருந்தால், கால்களை முழுமையாகப் பாதுகாக்கும் காலணிகளை அணிய வேண்டும்.
கால்களில் காயங்கள் அல்லது சிறிய வெட்டுகள் இருந்தால், அவற்றில் அசுத்தமான நீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மாசுபட்ட நீருடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு, வீட்டிற்கு வந்ததும் சுத்தமான நீர் மற்றும் சோப்பைப் பயன்படுத்தி உடலை நன்றாகக் சுத்தம் செய்ய வேண்டும்.

ஈரமான அல்லது அசுத்தமான ஆடைகளை மாற்றிவிட்டு, சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். கவனத்தில் கொள்ள வேண்டியது! லெப்டோஸ்பைரோசிஸ் நோய்க்கு முறையான சிகிச்சை உள்ளது.
ஆனால், உரிய நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால் அது தீவிரமடைந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே, மழைக்காலத்தில் காய்ச்சல் அல்லது உடல் வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அலட்சியப்படுத்ததமல் மருத்துவ சிகிச் பெற வேண்டியது இன்றியமையாதது.
குறிப்பாக, தேங்கிய மழைநீரில் நடந்து சென்றிருந்தால் மருத்துவரிடம் அந்தத் தகவலைத் தெரிவிக்க வேண்டும். ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் மூலம் பெரிய பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |