தனது கண்களை தானமாக கொடுத்த நடிகர் புனித்: மறைந்த பின்பும் ஒளிரும் மனிதநேயம்
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார்(46) தனது கண்களை தானம் செய்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கன்னட திரையுலகில் பிரபல கதாநாயகனும், கர்நாடக மக்களால் செல்லமாக ‘அப்பு’ என்று அழைக்கப்பட்ட நடிகர் புனித் நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் காலமானார்.
இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார். நடிகர் மட்டுமல்லாது பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று பன்முகம் காட்டியவர்.
சென்னையில் பிறந்த இவர், பிறந்த ஆறு மாதத்திலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதுடன், 1985ம் ஆண்டு சிறந்த குழந்தை நட்சத்திர தேசிய விருது வாங்கினார்.
அதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு வெளியான ‘அப்பு’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதிலிருந்து ரசிகர்கள் அவரை ‘அப்பு’ என்றும், ‘பவர் ஸ்டார்’ என்று செல்லமாக அழைத்து வருகின்றனர்.
உடற்பயிற்சி செய்வதிலும், உடல் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்தக் கூடியவராக இருந்து வந்துள்ளார் புனித் ராஜ்குமார். இவருக்கு ஒரு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவராக அறியப்பட்டவர் ராஜ்குமார். இந்த நிலையில் அவர் மறைந்த பிறகு அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.
அவரது தந்தை ராஜ்குமாரின் பெயரில் இயங்கி வரும் அறக்கட்டளைக்கு அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.