பாடகி லதா மங்கேஷ்கரின் அஸ்தி எங்கே கரைக்கப்பட்டது? வெளியான தகவல்
பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நலக் குறைவால் கடந்த ஞாயிற்றுகிழமை காலமானதையடுத்து, அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்தியாவின் இசை மகளாக வலம்வந்த லதா மங்கேஷ்கர், 1942ல் தனது 13வது வயதில் இசை உலகில் கால் பதித்து, பிரபல பாடகியானார்.
இசைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்த இவரின் இறப்பு ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனை காட்சி வெளியான நிலையில், தற்போது லதாவின் அஸ்தியை எங்கு கரைக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
லதா மங்கேஷ்கரின் உறவினர்கள், அவரது அஸ்தியை வியாழக்கிழமை காலை, நாசிக்கில் அமைந்துள்ள கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் புனித ராமகுண்டத்தில் கரைத்தனர்.
புனித ராமகுண்டத்தில் இன்று நடைபெற்ற மிகச் சிறிய சடங்கில், லதா மங்கேஷ்கரின் உறவினர் ஆதிநாத் மங்கேஷ்கர், சகோதரி ஆஷா போஸ்லே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் அமைந்திருக்கும் புனித தீர்த்தங்களில் ராம குண்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், 300 ஆண்டுகள் பழமையான இந்தக் குளம், 1696ஆம் ஆண்டு சித்தாராவ் கடர்கர் என்பவரால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
புராணங்களின்படி, ராமபிரான், 14 ஆண்டுகள் வனவாசத்தின்போது, தினமும் இந்தக் குளத்தில் வந்துதான் நீராடியதாக ஐதீகமும் உள்ளது.