நெய் விற்று மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்! தன்னம்பிக்கை கதை
5 லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட தொழில் தற்போது மாதம் 10 லட்ச ரூபாய் வருமானத்தை ஈட்டித்தருகிறது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?
ஆம், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என நிரூபித்துக்காட்டியுள்ளார் நித்யா கணபதி(வயது 47).
சுயதொழிலில் ஆர்வம்
இந்தியாவின் டெல்லி வளர்ந்த நித்யா கணபதி, தொழில் ரீதியாக மும்பைக்கு குடியேறினார்.
அங்கு சுமார் 23 ஆண்டுகள் பத்திரிக்கையாளராக பணியாற்றி வந்த நித்யாவுக்கு, சுய தொழில் தொடங்கவேண்டும் என்பது விருப்பம்.
தனக்கு தெரிந்த, தங்கள் குடும்பத்தினரின் ரகசியத்தையே தொழிலாக மாற்ற எண்ணினார். அவரது வீட்டில் தயாரிக்கப்பட்ட நெய்க்கு, நண்பர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது, இதையே தொழிலாக்கி Nei Native எனத் தொடங்கினார்.
சிறிய முதலீட்டில் நெய் தொழில்
5 லட்ச ரூபாய் முதலீட்டுடன் ஆரம்பித்து, தற்போது மாதம் 10 லட்ச ரூபாயை வருமானமாக ஈட்டுகிறார்.
நெய் தவிர, பில்டர் காபி தூள், தெரட்டி பால், சுத்தமான தேன், தேங்காய் எண்ணெய், பழங்கள் மற்றும் நட்ஸ்களால் ஆன தேன் என பலவகையான ஆரோக்கியமான பொருட்களையும் விற்பனை செய்து வருகிறார்.
2 கோடி ரூபாயை வருமானமாக ஈட்ட வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு உழைக்கும் நித்யா கணபதி, பக்கத்து ஊர்களில் வசிக்கும் பெண்களுக்கு வேலைவாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
தொழில் ரகசியம்
பாரம்பரிய முறைப்படி பாலை தயிராக்கி, அதிலிருந்து பாலாடையை எடுத்து வெண்ணெய் திரட்டி தயாரிக்கப்படும் நெய்க்கு மவுசு அதிகம் என்கிறார் நித்யா கணபதி.
முதலில் சுயதொழில் தொடங்கும் போது, 20க்கும் மேற்பட்ட நெய் பாட்டில்களை நண்பர்களுக்கு இலவசமாக வழங்கி அவர்களது விமர்சனங்களின் மூலம் தொழிலை வளர்த்துள்ளார்.
அடுத்ததாக இரண்டு மாதங்களில் நிறுவனத்திற்கான லைசென்ஸ், அனுமதி, உபகரணங்கள் வாங்கி தொழிலை தொடங்கியுள்ளனர். சில வாரங்களிலேயே தயாரிக்கப்பட்ட நெய் பாட்டில்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தது, தற்போது மாதம் 2000 பாட்டில்களுக்கு மேல் விற்பனையாகிறதாம்.
டெல்லி, பெங்களூரு, சென்னை என இந்தியாவின் முக்கிய நகரங்களில் Nei Nativeன் பொருட்களை விற்பனை செய்யப்படுவதாகவும் பெருமிதம் கொள்கிறார் நித்யா கணபதி.
Story- The Weekend Leader