சூடான சாதத்திற்கு கோவில்பட்டி சிக்கன் குழம்பு எப்படி செய்றாங்க தெரியுமா?
பொதுவாக எங்கு சென்றாலும் ஞாயிறு தினங்களில் அசைவமாக தான் இருக்கும்.
வாரம் வாரம் ஒரே வகையில் சமைக்காமல் தினமும் ஒரு ஸ்டைலில் சமைத்தால் பார்ப்பதற்கும் சுவைப்பதற்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.
அந்த வகையில் அனைவருக்கும் பிடித்தமான சிக்கன் குழம்பு சூடான சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.
இதன்படி, ஞாயிற்றுகிழமையை ஸ்பெஷலாக மாற்றுவதற்கு கோவில்பட்டி சிக்கன் குழம்பு எப்படி செய்றாங்க - ன்னு பார்க்கலாம்.
அரைப்பதற்கு தேவையான பொருட்கள்
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 8 பல்
* பச்சை மிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 6
பிற பொருட்கள்
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* பட்டை - 1/2 இன்ச்
* சோம்பு - 1 சிட்டிகை
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* சிக்கன் - 1/2 கிலோ
* கொத்தமல்லி - சிறிது
* விளக்கெண்ணெய் - 3 துளிகள்
கோவில்பட்டி சிக்கன் குழம்பு செய்முறை
முதலில் கறிக்கு தேவையான கலவையை அரைத்து கொள்ள வேண்டும். அத்துடன் தேவையானளவு சிக்கன் எடுத்து கழுவி வைக்கவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு சூடானதும், பிரியாணி இலை, பட்டை, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
அத்துடன் வெங்காயம், அரைத்த கலவை இவை இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து பச்சை வாசணை போகும் வரை வதங்க விடவும். அதனுடன் தக்காளியும் சேர்த்து கொள்ளவும்.
தண்ணீர் கொஞ்சமாக சேர்த்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
பின்பு கொதிக்கும் நீரில் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி 15 நிமிடங்கள் வரை வேக விடவும். கறி வெந்ததும் சில துளிகள் விளக்கெண்ணெய் விட்டு மீண்டும் 2 நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைத்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் சுவையான கோவில்பட்டி சிக்கன் குழம்பு தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |