இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கோவக்காய் மசாலா குழம்பு... இப்படி செய்து பாருங்க
பொதுவாகவே எல்லா காலங்களிலும் மலிவு விலையில் பெற்றுக்கொள்ளக் கூடிய ஊட்டச்சத்து மிக்க காய்கறிகளுள் கோவக்காய் முக்கிய இடம் வகிக்கின்றது.
குறிப்பாக நோய்கள் மற்றும் தொற்றுகளுக்கு தேவையான மருந்து கோவப்பழங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு இதிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. கோவக்காயில் உள்ள பீடா கரோடின் என்னும் சத்தானது இதயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது.
கோவைக்காயில் இரும்புச்சத்து, கால்சியம், விட்டமின் பி1 மற்றும் பி2, நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் செறிந்து காணப்படுகின்றது.
இவ்வளவு ஊட்டச்சத்துக்களை கொண்ட கோவக்காயை கொண்டு அசத்தல் சுவையில் எவ்வாறு கோவைக்காய் மசாலா குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோவக்காய் - 1/4 கிலோ கிராம்
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
சீரகம் - 1/2 தே.கரண்டி
சோம்பு - 1/2 தே.கரண்டி
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் - 2 தே.கரண்டி
மல்லித் தூள் - 1 தே.கரண்டி
சீரகத் தூள் - 1 தே.கரண்டி
உப்பு - 1 தே.கரண்டி
தக்காளி - 4 (அரைத்தது)
தண்ணீர் - 1/2 கப் + 1 கப்
வறுத்த வேர்க்கடலை - 1/4 கப் (பொடித்துக் கொள்ளவும்)
கரம் மசாலா - 1 தே.கரண்டி
சர்க்கரை - 1/2 தே.கரண்டி
தேவையான பொருட்கள்
முதலில் கோவக்காயை எடுத்து, அதன் இரு முனைகளையும் நீக்கிவிட்டு, நான்கு பகுதிகளாக கீறி விட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கோவக்காயை போட்டு சுருங்கும் வரையில் நன்றாக வதக்கி ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதே எண்ணெயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரையில் வதக்கி, அதனுடன் இஞ்சு பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்னர் அரைத்த தக்காளியை சேர்த்து 5 நிமிடம் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின் 1/2 கப் நீரை ஊற்றி, பொடித்து வைத்துள்ள வேர்க்கடலையை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு கொதிக்கவிட வேண்டும்.
பின்னர் அதனுடன் வதக்கி வைத்துள்ள கோவக்காயை சேர்த்து கிளறிவிட்டு, மிதமான தீயில் மூடி வைத்து 10 நிமிடங்கள் வரையில் வேகவிட வேண்டும்.
இறுதியாக கரம் மசாலா மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கினால், அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த கோவக்காய் மசாலா கறி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |