வன்கொடுமை செய்பவர்கள் மீது பாயும் போக்சோ சட்டம்: புகார் அளித்தால் என்ன நடக்கும்?
கோவையில் ஆசிரியர் ஒருவரின் வன்கொடுமை காரணமாக 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதுடன், குறித்த ஆசிரியர் போச்சோ சட்டத்தின் 2 பிரிவுகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் பெண்களுக்கு துன்புறுத்தி கொலை செய்வது, வன்கொடுமை, கற்பழிப்பு என நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக பள்ளியில் படிக்கும் மாணவிகள் தந்தையாக இருந்து செயல்பட வேண்டிய காமக்கொடூர ஆசிரியர்களிடம் மாட்டிக்கொண்டு பல சித்ரவதைகளை அனுபவித்து வருவதுடன், வெளியில் கூறுவதற்கும் தயங்கி வருகின்றனர்.
சில மாணவிகள் தைரியமாக வெளியே கூறினாலும், ஒரு சிலர் தற்கொலை வரை செல்வது வேதனைக்குரியதாக உள்ளது.
இவ்வாறு சிறாருக்கு எதிராக செயல்படும் குற்றங்களுக்கு எவ்வாறு புகார் அளிப்பது என்ற தடுமாற்றம் பெற்றோர்களுக்கும் இருந்துவருகின்றது.
இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டம் 2012ல்தான் பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் 2012 நவம்பர் 12ம் தேதி அமலுக்கு வந்துள்ளது.
எந்த குற்றச்செயல் போக்சோ சட்டமாக மாறும்
பாலியல் சமபந்தமான தொந்தரவு, ஆபாசமாக படமெடுப்பது என்ற குற்றங்கள் போக்சோ சட்டமாக மாறும்.
அதாவது இந்தியாவில் 18 வயதிற்கு கீழ் இருக்கும் சிறுவர், சிறுமியர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாலோ, உடல் ரீதியாக பாதிக்கப்படுதல், வன்கொடுமைக்காக சிறுவர்களை கடத்துதல் இந்த குற்றங்களுக்கு இந்த சட்டம் பாயும்.
குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கலாம். அதுமட்டுமின்றி குழந்தைகள் இவ்வாறான வன்கொடுமை சூழலில் இருப்பதை தெரிந்தவர்கள் மறைத்தாலும் தண்டனை கிடைக்கும்.
புகாரை யார் எங்கு கொடுக்கலாம்?
பாதிக்கப்பட்ட சிறார்களின் உறவினர்கள், நண்பர்கள், மருத்துவர்கள், பெற்றோர்கள், பள்ளியோ, அங்கு பணிபுரியும் ஊழியர்களோ இந்த புகாரை கொடுக்கலாம்.
அதுமட்டுமின்றி சிறுவயதில் பாதிக்கப்பட்டவர் 30 வயதானாலும் தனது புகார்களை தெரிவிக்கலாம்.
இந்த புகாரை நேரடியாக காவல் நிலையத்திலோ, போக்சோ இ-பாக்ஸ் என்ற இணையபக்கம் மூலமாகவோ தெரிவிக்கலாம்.
சிறார் இலவச தொலைபேசி உதவி எண் `1098' மூலமாகவும் பாதிக்கப்பட்டவர் புகார் தெரிவிக்கலாம்.
புகார் அளித்த பின்பு என்ன நடக்கும்?
புகார் அளித்த சிறாரின் பாதுகாப்பு பொலிசாரின் முதன்மையான கடமையாக இருக்கின்றது.
அவர்கள் உடல் அளவில் பாதிப்பிற்கு மருத்துவ சிகிச்சையும், மனதளவில் தைரியமாவதற்கு கவுன்சிலிங் ஏற்பாடு செய்வார்கள்.
சம்பவத்தினை உணரும் சூழலிலோ பெண் காவல் அதிகாரி வாக்குமூலத்தை பதிவு செய்யும் வசதி.
வீட்டில் பாதுகாப்பு இல்லையெனில் காப்பகத்தில் தங்க வைத்தல்.
புகார் கிடைக்கப்பெற்ற 24 மணி நேரத்துக்குள்ளாக, அது குறித்து குழந்தைகள் நலக்குழுவின் கவனத்துக்கு காவல்துறை கொண்டு செல்ல வேண்டும்.
தவறாக புகார் அளித்தால்...
நல்ல நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த போக்சோ சட்டத்தில் தவறாக பிறர் மீது புகார் அளித்தால், குறித்த நபருக்கு தண்டனையும், அபராதமும் விதிக்கப்படுமாம்.
அடையாளத்தை வெளிப்படுத்தினால் தண்டனை
பாதிக்கப்பட்ட சிறார் போக்சோ சட்டத்தின் கீழ் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர்களின் பெயர், முகவரி, பள்ளி, புகைப்படம் இவற்றின் விபரங்களை வெளியிடக்கூடாது. அவ்வாறு வெளியிட்டால் ஆறு மாதம் சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.