ரத்த அழுத்தத்தை சீராக்கும் கொத்தமல்லி சட்னி... பத்தே நிமிடத்தில் எப்படி செய்வது?
பொதுவாகவே எல்லா காலங்களிலும் மழிவாக கிடைக்கக்கூடிய ஒரு பொருள் தான் கொத்தமல்லி இலை. கொத்தமல்லி இலை, உடல் நலத்திற்கு மிகவும் நன்மை பயக்கக்கூடியது.
குறிப்பாக ரத்த அழுத்தத்தை சீராக்குவது, பித்தம் தொடர்பான பிரச்னைகளுக்கு இது சிறந்த தெரிவாக இருக்கும். மேலும் கொத்தமல்லி இலை உணவின் சுவையை இரட்டிப்பாக்கும் தன்மை கொண்டது.
அதில் செய்யப்படும் ரசம், துவையல் ஆகியன மிகவும் சுவை நிறைந்ததாக இருக்கும். இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட கொத்தமல்லி இலைகளை கொண்டு எவ்வாறு அவைரும் விரும்பி சாப்பிடும் வகையில் அட்டகாசமான சுவையில் சட்னி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
வெங்காயம் - 2
கொத்தமல்லி - 1 கைப்பிடி
தேங்காய் - 1/4 முடி (பொடியாக நறுக்கியது)
பொட்டுக்கடலை - 1/4 கப்
உப்பு -தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
வரமிளகாய் - 1
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் வெங்காயத்தை போட்டு பொன்நிறமாகும் வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். பின்பு அனுடன் 1 கைப்பிடி கொத்தமல்லியை சுத்தம் செய்துவிட்டு தண்ணீரில் கழுவி சேர்த்து சுருங்கும் வரையில் நன்றாக வதக்கி தனியாக எடுத்து ஆறவிட வேண்டும்.
பின்னர் தேங்காய் துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனுடன் பொட்டுக்கடலை, வதக்கிய வெங்காயம், மல்லி மற்றும் சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்தாக அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
கடைசியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னில் சேர்த்து கிளறினால் ஆரோக்கியம் நிறைந்த சுவையான மணமணக்கும் கொத்தமல்லி சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |