ஏகப்பட்ட வியாதிகளை குணப்படுத்தும் கொள்ளு ரசம்- இப்படி வைச்சு சாப்பிட்டு பாருங்க
எமது முன்னோர்கள் "இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு" என்ற பழமொழியை அடிக்கடி கூறுவார்கள்.
இதற்கான உண்மையான அர்த்தம், பூதம் போன்ற உடலையும் கொள்ளு வேகமாக கரைத்து விடும் என்பதாகும்.
ஆரோக்கியத்தில் அதிகமாக கவனம் செலுத்தும் எமது முன்னோர்கள், ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றினார்கள். அதிலும் முக்கியமாக நாம் தற்போது வருடத்திற்கு ஒருமுறை சாப்பிடும் உணவுகளை அவர்கள் அப்போது அடிக்கடி சாப்பிட்டு வந்தனர்.
அந்த வரிசையில் பழமை வாய்ந்த உணவு வகைகளில் ஒன்று தான் கொள்ளு ரசம்.
இது செய்து குடிப்பதால் சளி பிடிக்காது மற்றும் நாள்பட்ட நோய்கள் விரைவில் குணமாகும்.
இவ்வளவு சிறப்புக்களை கொண்ட கொள்ளு ரசத்தை எப்படி இலகுவாக செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கொள்ளு ரசம்
தேவையான பொருட்கள்
- கொள்ளு - 1 ஸ்பூன்
- கொத்தமல்லி விதை - ½ ஸ்பூன்
- புளி - ½ எலுமிச்சை அளவு
- தக்காளி - 1
- சீரகம் - 1½ ஸ்பூன்
- மிளகு - 1½ ஸ்பூன்
- பூண்டு - 5 பல்
- வரமிளகாய் - 3 (காரத்திற்கு ஏற்ப)
- மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
- கருவேப்பில்லை - சிறிதளவு
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- பெருங்காயம் - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - சிறிதளவு
ரசம் வைப்பது எப்படி?
ஒரு பாத்திரத்தில் பழுத்த தக்காளியை போட்டு நன்றாக வேக வைக்கவும். தக்காளி நன்றாக வெந்து வரும் போது புளியை போட வேண்டும். அந்த நீரை அப்படியே ஆற விடவும்.
பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து அதில் கொள்ளு பருப்பை போட்டு வறுத்தெடுக்கவும். அதே போல் மல்லி விதைகளையும் வறுக்கவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் கொள்ளு, கொத்தமல்லி விதை, மற்றும் சிறிதளவு கல்லு உப்பு, வரமிளகாய், மிளகு, 4-5 கருவேப்பிலை இலை, மற்றும் பூண்டு சேர்த்து அரைக்கவும். கடைசியாக சீரகம் சேர்த்து மிக்ஸில் இரண்டு பல்ஸ் விட்டு எடுக்கவும்.
இதனை தொடர்ந்து தக்காளி மற்றும் புளி ஒன்றாக இருக்கும் அந்த சாற்றை கரைத்து எடுத்து கொள்ளவும்.
பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சேர்த்து நன்றாக பொறிய விட்டு அரைத்து வைத்திருக்கும் கலவையை எண்ணெய்யுடன் சேர்க்கவும். அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
வாசம் வர துவங்கியதும், அதனுடன் தக்காளி மற்றும் புளி சாற்றை ஊற்றவும்.
இறுதியாக உப்பு, பெருங்காயம் தூள், கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான கொள்ளு ரசம் தயார்! சூடான சதத்துடன் பரிமாறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |