உடற்பருமனை குறைக்கணுமா? அருமையான கொள்ளு மசாலா செய்து சாப்பிடுங்க
தற்போது அனைவருக்கும் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினை என்னவென்றால், உடற்பருமன் தான். அதற்கு என்னவெல்லாமோ செய்வோம்.
ஆனால், உடலிலுள்ள கொழுப்பைக் கரைப்பதில் முக்கியமான பங்கு வகிக்கின்றது கொள்ளு.
சரி இனி கொள்ளு மசாலா எப்படி செய்வதென பார்ப்போம்...
தேவையான பொருட்கள்
கொள்ளு - 1 கப்
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, வெள்ளைப் பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
மசாலாத் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் கொள்ளை மலர வேகவிட வேண்டும். பின்னர் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அதன் பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், கடுகு, பெரிய வெங்காயம் என்பவற்றை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதன் பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அதன் பின் தக்காளி குழைய வதங்கியதும் இஞ்சி,வெள்ளைப் பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி, வெள்ளைப் பூண்டு பச்சை வாசம் போனதும் மஞ்சள் தூள், மசாலாத் தூள், மல்லித்தூள் என்பவற்றை சேர்த்து வதக்கவும்.
அதன் பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பின் உப்பு போடவும். வேகவைத்த கொள்ளை ஓரளவு மசித்து சேர்க்கவும். மசாலா நன்றாக திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லித் தழையை தூவி பரிமாறவும்.
சத்தான கொள்ளு மசாலா தயார்.