தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டால் என்ன நடக்கும்? சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?
வாழைப்பழக் கூட்டத்தின் ராஜா என்றால் அது செவ்வாழை தான், பொட்டாசியம், மக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, தையமின், ஃபோலிக் ஆசிட், பீட்டா கரோட்டின் என வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புகள் நிறைந்த பழம் செவ்வாழை.
இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்து உடலுக்கு தேவையான சக்தியினை அளிக்கின்றது. ஒரு செவ்வாழை பழத்தில் 4 கிராம் அளவிற்கான நார்ச்சத்து அடங்கியுள்ளது.
மேலும் இதனுடன் உடலுக்கு தேவையான பொட்டாசியம் சத்தும் அடங்கியுள்ளது. இந்த பொட்டாசியம், சிறுநீரக கல், இருதய நோய், புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களில் இருந்து நம்மை காக்கும் ஆற்றல் உடையது.
மனிதனின் உடலுக்கு தினமும் தேவையான வைட்டமின் சி அளவில், 16 சதவீதம் இந்த செவ்வாழை பழங்களில் நிறைந்துள்ளது. இரத்த சோகை பிரச்சனை, இரத்த குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளை குறைப்பதில் செவ்வாழைக்கு மிக முக்கிய பங்கு உண்டு.
இதுதவிர மூளை மற்றும் இதயத்தின் செயல்பாடு, ரத்த ஓட்டம், ரத்த உற்பத்தி, சிறுநீரகம், கல்லீரல் மற்றும் குடலின் இயக்கம் என பலவிதமான செயல்பாடுகள் சீராக நடைபெற செவ்வாழை உதவிபுரிகிறது.
இந்த பதிவில் செவ்வாழையின் மற்ற பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்,
* செவ்வாழையில் வைட்டமின் `ஏ’ ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளதால், கண்களின் செல்களில் ஏற்படக்கூடிய பிரச்னைகளைச் சரிசெய்கிறது. தினமும் காலை மற்றும் மாலை இரண்டு வேளைகள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால், கண்கள் சிவந்துபோதல், கண்களில் எரிச்சல், நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
* குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் செவ்வாழையில் அதிகம் நிறைந்துள்ளது, ஏனெனில் இதில் கொழுப்பு குறைவாகவும், அதேசமயம் நார்ச்சத்து அதிகமாகவம் உள்ளது, கார்போஹைட்ரேட், தாது உப்புகள், கால்சியம் மற்றும் இரும்புசத்து அதிகம் இருப்பதால் குழந்தையின் வளர்ச்சியை துரிதப்படுத்தும்.
* கை கால் நடுக்கம், கை கால் மரத்து போதல் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் தினமும் காலை 6மணிக்கு ஒரு செவ்வாழைப்பழம் என தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும்.
* செவ்வாழையில் நிறைந்துள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் ரத்த நாளங்களை விரிவுபடுத்தும் பணியை செய்வதால், நம் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதுடன் ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது, இதனால் இதயம் தொடர்பான நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.
* நம் உடலில் நோய்கள் அண்டாமல் இருக்க நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவுடன் இருக்க வேண்டியது அவசியம், தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தாலே இது சாத்தியமாகும், ஏனெனில் இதிலுள்ள வைட்டமின் சி மற்றும் பி6 நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி பல்வேறு நோய்களிலிருந்து நம் உடலை பாதுகாக்கும்.
* வயிற்றுப்போக்கு, வீக்கம் மற்றும் மலச்சிக்கல் உள்ளிட்ட பல்வேறு செரிமான பிரச்சனை உள்ளவர்கள் செவ்வாழையை தாராளமாக சாப்பிடலாம், இதிலுள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி செரிமானத்தை மேம்படுத்துகிறது, மிக முக்கியமாக நம் குடலில் நல்ல பக்டீரியாக்களை அதிகரிப்பதில் செவ்வாழைக்கு முக்கிய பங்குண்டு.
* உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் காலை உணவாக செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வர, பசி மட்டுப்படுவதால், உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருக்கும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும்.
* பெண்களுக்கு கருப்பையை பலப்படுத்தும் தன்மை செவ்வாழைக்கு உண்டு, இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் மற்றும் வைட்டமின் பி 6 கருவுறுதலின் விகிதத்தை அதிகரிக்கிறது, மிக முக்கியமாக கருமுட்டைகள் சிதையாமல் பாதுகாப்பதால் கருவுறுதல் அதிகரிக்கும்.
எப்போது சாப்பிடலாம்?
காலையில் முதல் உணவாக ஒரு செவ்வாழைப்பழத்தை உமிழ்நீருடன் கூழாக மென்று சாப்பிட்டால் ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகளில் 60 சதவிகிதம் கிடைத்துவிடும்.
நம் உடலும் அதன் மொத்த சத்துக்களை கிரகித்துக் கொள்வதால் ஏராளமான நன்மைகளை பெறலாம்.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?
சர்க்கரை நோயாளிகள் தாராளமாக மருத்துவ ஆலோசனையின் படி செவ்வாழையை சாப்பிடலாம், ஏனெனில் ரத்த சர்க்கரையின் அளவை சீராக்கும் தன்மை செவ்வாழைக்கு உண்டு.