மரவள்ளிக்கிழங்கு மசியல் ரெசிபியா? கேரளா ஸ்டைலில் அடிபொலி சைட் டிஷ்
கிழங்கு வகைகளான உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, பனங்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகிய கிழங்குகளில் அதிகமான நார்ச்சத்து உள்ளது.
அதில், வீட்டில் மரவள்ளிக்கிழங்கு வாங்கினால் வேகவைத்து சாப்பிடுவது வழக்கம். இல்லாவிட்டால் சிலர் சிப்ஸ் போடுவார்கள்.
மற்ற கிழங்குகளை விட தண்ணீரில் 3-4 முறை மரவள்ளிக்கிழங்கை கழுவ வேண்டும். இல்லாவிட்டால் மண் வாசணை வந்து கொண்டே இருக்கும். நமது அண்டை மாநிலமான கேரளாவில் மரவள்ளிக்கிழங்கு பிரதான உணவுப்பழக்கத்தில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மரவள்ளிக்கிழங்கை அவித்து சாப்பிடுவதற்கு பதிலாக உருளைகிழங்கை போன்று மசித்து சாப்பிடுவார்கள். சுவை நாம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும்.
அந்த வகையில், கேரளா ஸ்டைலில் மரவள்ளிக்கிழங்கு மசியல் எப்படி செய்வது என பார்க்கலாம்.
மரவள்ளிக்கிழங்கு மசியல்
தேவையான பொருட்கள்
- மரவள்ளிக்கிழங்கு
- தேங்காய் துருவல்
- சின்ன வெங்காயம்
- கறிவேப்பிலை
- பச்சை மிளகாய்
- வர மிளகாய்
- மஞ்சள் தூள்
- உப்பு
- மிளகாய் தூள்
- சீரகம்
செய்முறை
மரவள்ளிக்கிழங்கு சமைக்கும் முன்னர், அரை மணி நேரம் தண்ணீரில் நன்றாக ஊற வைக்கவும். அத்துடன் 3-4 முறை கழுவி தோல் சீவிய பின்னர் தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும்.
முக்கால் கிலோ மரவள்ளிக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக வெட்டி குக்கரில் நன்கு வேக வைக்கவும். உப்பு போடாமல் வேக வைப்பது நல்லது. கிழங்கு வெந்த பின்னர், மசாலா செய்வதற்கு கால் மூடி தேங்காய் துருவல், நான்கு சின்ன வெங்காயம், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் மிளகாய் தூள், முக்கால் டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் உப்பு போட்டு நன்றாக அரைக்கவும்.
மா போன்று அல்லாமல் கொரகொரப்பாக அரைத்து இரண்டு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, இரண்டு பச்சை மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து மீண்டும் அரைக்கவும். குக்கரில் வெந்த மரவள்ளிக்கிழங்குடன் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை கலந்து விட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மசித்து விடவும்.
மரவள்ளிக்கிழங்கில் இரண்டு ஸ்பூன் உப்பு போட்டு, மிதமான சூட்டில் அடுப்பை வைத்து விட்டு, மஞ்சள் தூள் கொஞ்சம் கலந்து விடவும்.
தாளிப்புக்கு மூன்று ஸ்பூன் கடலை எண்ணெய் சூடுபடுத்தி கொஞ்சம் கடுகு, இரண்டு வர மிளகாய், மூன்று சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வறுத்து கிழங்குடன் கலந்து கொள்ளவும். அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறினால் அடிபொலி சுவையில் அட்டகாசமான மரவள்ளிக்கிழங்கு மசியல் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |