6 மணி நேரத்தில் 24 முட்டைகள் இட்ட கோழி! நம்பமுடியாத அதிசயம்
கேரளாவில் கோழி ஒன்று 6 மணி நேரத்தில் 24 முட்டைகள் இட்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கோழி நிகழ்த்திய அதிசயம்
கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் ஏராளமான பறவை பண்ணைகள் உள்ளன. ஆலப்புழாவை அடுத்த புன்னம்புறாவை சேர்ந்த பிஜூ என்பவர் இங்கு கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.
அங்கு கலப்பின கோழிகளை வளர்த்து வந்துள்ள நிலையில், சுமார் 25 கோழிகள் உள்ளன.
நேற்று காலையில் பிஜூ, பண்ணையில் உள்ள கோழிகளை பார்வையிட்டார். அப்போது ஒரு கோழி வித்தியாசமாக மண்ணை நோண்டிக் கொண்டிருந்தது. அதன் அருகில் சென்ற பிஜூ, அந்த கோழியின் காலில் எண்ணை தடவிவிட்டுள்ளார்.

மண்ணுக்குள் 24 முட்டைகள்
சிறிது நேரத்தில் அந்த கோழி, தான் தோண்டிய மண்ணுக்குள் முட்டை இட தொடங்கியது. காலை 8.30 மணிக்கு முதல் முட்டை போட்டது. அதன்பின்பு சிறிது நேரத்திற்கு ஒரு முறை முட்டை போட்டபடி இருந்தது.
இதை கண்டு ஆச்சரியமடைந்த பிஜூ, அந்த கோழியை கண்காணித்தபடி இருந்தார். மதியம் 2.30 வரை சுமார் 6 மணி நேரம் அந்த கோழி முட்டை போட்டபடி இருந்தது. மொத்தம் 24 முட்டைகள் போட்டு, பின்பு நிறுத்தியுள்ளது.

ஆச்சரியத்தில் மருத்துவர்கள்
இதனைக் கண்டு ஆச்சரியமடைந்த பிஜூ, உடனே கால்நடை மருத்துவ கல்லூரிக்கு தகவல் தெரிவித்த நிலையில், அங்கிருந்து கோழி மற்றும் வாத்து பராமரிப்பு துறை உதவி பேராசிரியர் பினோஜ் சாக்கோ, கோழிப்பண்ணைக்கு சென்று ஆய்வு செய்துள்ளார்.
கோழியையும், அது இட்ட 24 முட்டைகளையும் பார்வையிட்ட அவர், இது அரிதிலும் அரிதான சம்பவம் என்றும் கோழிக்கு ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக தொடர்ந்து முட்டை போட்டிருக்கலாம் என கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
குறித்த கோழியை அறிவியல் ஆய்வு செய்ய இருப்பதாகவும் கூறிய நிலையில், மக்கள் குறித்த கோழியை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.