மிஷ்கின் விவகாரம்: விமர்சித்தவர்களைக் கேள்வியால் திணறடித்த கீர்த்தி சுரேஷ்!
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இடம்பெற்ற சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
மிஷ்கின், கீர்த்தி சுரேஷிடம் பேசிய வீடியோ வைரலான நிலையில், அதற்கு நடிகை அளித்துள்ள பதில் கவனம் பெற்றுள்ளது.

நவம்பர் 20ஆம் தேதி வெளியாகும் ‘சத்தியவான் சாவித்திரி’ Drumsticks Productions மற்றும் Zee Studios நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை வெடிக்காரன்பட்டி S. சக்திவேல் தயாரித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் பிரவீன் S. விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாபாத்திரத்திலும், மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

கீர்த்தியைப் பாராட்டிய மிஷ்கின்
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய மிஷ்கின், “கீர்த்தி சுரேஷை என்னுடைய மகளைப் போலப் பார்க்கிறேன். அவரிடம் அபாரமான நடிப்புத் திறமை இருக்கிறது. இந்திய சினிமாவில் எனக்குப் பிடித்த நடிகைகளில் சாவித்திரியும் ஒருவர்.
அந்தப் பெயரில் உருவாகியுள்ள படத்தில் கீர்த்தி நடித்திருப்பது மகிழ்ச்சி. அவர் இன்னும் 20 முதல் 25 ஆண்டுகள் தொடர்ந்து நடிக்க வேண்டும்” என்று பாராட்டினார். மேலும், இசையமைப்பாளர் சாம் C.S. மற்றும் இயக்குநர் பிரவீன் S.
விஜயின் பங்களிப்புகளையும் பாராட்டிய மிஷ்கின், இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

வைரலான வீடியோவால் எழுந்த சர்ச்சை
இந்த நிகழ்வின்போது மிஷ்கின், கீர்த்தி சுரேஷைத் தொட்டுப் பேசிய காட்சி அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதைப் பார்த்த சிலர், கீர்த்தி அப்போது அசௌகரியமாக உணர்ந்ததாகக் கருத்துத் தெரிவித்தனர்.இதனால் சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்தது.

விமர்சனங்களுக்கு கீர்த்தி சுரேஷ் பதில்
இந்நிலையில், தனக்கு அசௌகரியம் ஏற்பட்டதாகக் கூறியவர்களுக்குப் பதிலளித்த கீர்த்தி சுரேஷ், “முதலாவதாக, என் முகத்தில் உங்களுக்கு எங்கே அசௌகரியம் தெரிகிறது?நாங்கள் தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான பந்தம் போல இருக்கிறோம் என்று அவரோ நானோ சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?
இரண்டாவதாக, எனக்குச் சங்கடமாக இருந்தது என்று வைத்துக்கொண்டால், திரைப்படங்களில் எங்களைத் தொடுவார்கள் என்பதால் பொது இடங்களிலும் நான் அதனுடன் இயல்பாக இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா?நீங்கள் சில விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் சகோதரா” என்று தெரிவித்துள்ளார்.கீர்த்தி சுரேஷின் இந்த நேரடியான பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
Firstly , where do you see discomfort on my face ? Did you not hear him or me say that we share a bond like a father and daughter? Secondly , say I was uncomfortable, you are stating that we get touched in films so I should be okay with that in public too ? You really need to get something’s right brother 🙃
— Keerthy Suresh (@KeerthyOfficial) November 19, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |