உங்கள் குழந்தைகள் கீரையை வெறுக்கிறார்களா? அவர்களுக்காகவே சத்தான கீரை பிரியாணி
வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதே தாயின் நோக்கமாகும். ஆனால் குழந்தைகள் கீரை உணவை உணவில் சேர்த்துக் கொள்வதே இல்லை.
கீரைகளில் அதிகப்படியான இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் கீரை உணவுகளை எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
குழந்தைகளுக்கு பிரியாணி என்றால் மிகவும் பிடித்தமான உணவாக இருக்கும் அதனால் குழந்தைகளுக்கு வெறுப்பில்லாமல் உண்ண கீரை பிரியாணி செய்து கொடுக்கலாம்.

கீரை பிரியாணியை எப்படி செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாசுமதி அரிசி - ஒரு கப்
- வெந்தயக்கீரை- ஒரு கப்
- வெங்காயம் - 2
- தக்காளி - 1
- உருளைக்கிழங்கு - 2
- பச்சை மிளகாய் - 3
- பிரிஞ்சி இலை - 1
- இஞ்சி-பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
- நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடம் ஊற வைத்து, நெய்யில் ஈரம் போக வறுத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை தாளித்த பின்னர் பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து வெந்தயக்கீரை போட்டு வதக்கிய பின்னர் உருளைக்கிழங்கைச் சேர்த்து மேலும் வதக்கி, உப்பு சேர்க்கவும்.
அடுத்து அதில் அரிசியை சேர்த்துக் கலந்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
இப்போது சூப்பரான, சவையான கீரை பிரியாணி ரெடி.